இந்தியாவில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த திட்டம்; செப்டம்பர் 18-ந்தேதி தொடக்கம்?


இந்தியாவில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த திட்டம்; செப்டம்பர் 18-ந்தேதி தொடக்கம்?
x
தினத்தந்தி 25 May 2021 10:40 PM GMT (Updated: 25 May 2021 10:40 PM GMT)

இந்தியாவில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

அமீரகத்தில் ஐ.பி.எல்.

இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 4-ந் தேதி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மருத்துவ பாதுகாப்பு வளையத்தையும் மீறி 4 அணி வீரர்களுக்கு கொரோனா பரவியதால் வேறு வழியின்றி ஐ.பி.எல். காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்துள்ளன. இன்னும் இறுதிப்போட்டி, பிளே-ஆப் சுற்று உள்பட 31 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. மீதமுள்ள போட்டிகளை நடத்த முடியாமல் போனால் ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும் என்பதால் அதை நடத்துவதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்த வாய்ப்பில்லை. இந்த நிலையில் பாதியில் தடைப்பட்ட ஐ.பி.எல். போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

செப்டம்பரில்...

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி நேற்று கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டியுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் பேசி விட்டது. எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகள் அனேகமாக செப்டம்பர் 18-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 18-ந்தேதி சனிக்கிழமை, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. எனவே வாரத்தின் இறுதி நாட்களில் தொடங்கவே விரும்புவார்கள். இறுதிப்போட்டி அக்டோபர் 9-ந்தேதி அல்லது 10-ந்தேதிகளில் நடத்தப்படும். இதுவும் வாரத்தின் இறுதிநாள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். போட்டி அட்டவணையை இறுதி செய்து வருகிறோம். இதில் 10 நாட்களில் இரண்டு ஆட்டங்கள் வீதம் இடம் பெறும். மொத்தம் 3 வாரங்களுக்குள் 31 ஆட்டங்களையும் நடத்தி முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டார்.

ஐ.பி.எல். அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ஐ.பி.எல். போட்டிக்கு தயாராக இருக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு தகவல் சொல்லியுள்ளது. செப்டம்பர் 15-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் போட்டி தொடங்கப்படலாம் என்று கூறியிருக்கிறார்கள்’ என்றார்.

இங்கிலாந்தில் இருந்து துபாய்க்கு...

இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செப்டம்பர் 14-ந்தேதி மான்செஸ்டரில் நிறைவடைகிறது. அடுத்த நாளே அங்கிருந்து தனி விமானத்தில் இந்திய வீரர்கள் துபாய்க்கு கிளம்பி விடுவார்கள். அதே விமானத்தில் இங்கிலாந்து வீரர்களும் புறப்படுவார்கள். இவர்கள் ஏற்கனவே கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தில் (பயோ-பபுள்) இருப்பார்கள் என்பதால் இங்கு வந்ததும் உடனடியாக ஐ.பி.எல். போட்டிக்கான பயோ-பபுளில் தங்களை இணைத்துக் கொள்வார்கள். மேலும் அமீரகத்தில் அதிக நாட்கள் தனிமைப்படுத்தும் கெடுபிடிகள் கிடையாது. 3 நாட்கள் தனிமையில் இருந்தால் போதும் என்பதால் வீரர்களால் உடனடியாக போட்டிகளில் பங்கேற்க முடியும்.

இதே போல் கரிபியன் பிரிமீயர் லீக் போட்டியை முடித்துக் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் உடனடியாக வந்து விடுவார்கள். இருப்பினும் சில அணிகளுக்கு சர்வதேச போட்டிகள் உள்ளதால் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் சரிக்கட்ட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

ஐ.பி.எல். முடிந்து அடுத்த ஒரு வாரத்திற்குள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடங்குகிறது. தற்போதைய சூழலை பார்க்கும் போது, அனேகமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரத்துக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்ஆப்பிரிக்க தொடர் ரத்து

இந்திய அணி செப்டம்பரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட முடிவு செய்திருந்தது. தற்போது செப்டம்பரில் ஐ.பி.எல். கிரிக்கெட்டை நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதால், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி ரத்து செய்யப்படுகிறது.

அத்துடன், நவம்பர் மாதம் உள்ளூரில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டி உள்ளது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி எப்போது நிறைவடைகிறது என்பதை பொறுத்து நியூசிலாந்து தொடருக்கான தேதியில் மாற்றம் ெசய்யப்படும்.


Next Story