இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின், ஜடேஜா சுழல் மிரட்டலை சமாளிக்க தயாராக வேண்டும்; நியூசிலாந்து வீரர் நிகோல்ஸ் பேட்டி


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின், ஜடேஜா சுழல் மிரட்டலை சமாளிக்க தயாராக வேண்டும்; நியூசிலாந்து வீரர் நிகோல்ஸ் பேட்டி
x
தினத்தந்தி 27 May 2021 3:07 AM GMT (Updated: 27 May 2021 3:07 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்தில் அஸ்வின், ஜடேஜாவின் சுழல் மிரட்டலை திறம்பட சமாளிக்க தயாராக வேண்டும் என்று நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்ஸ் கூறினார்.

நிகோல்ஸ் பேட்டி
முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கு தயாராகி வரும் நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஹென்றி நிகோல்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணி சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலை கொண்டுள்ளது. அத்துடன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். அவர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பிற்பகுதியில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் சமீபத்திய ஆண்டுகளில் தங்களது தரமான பந்துவீச்சை நிரூபித்து காட்டியுள்ளனர். இதே போல் எங்கள் அணியிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் (டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி மற்றும் நீல் வாக்னெர்) உண்மையிலேயே 
பெருமைப்படும் வகையில் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். இத்தகைய பந்து வீச்சு வரிசையை எதிர்கொள்ளும் போது, அது சவால் மிக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு அணியாக இந்த போட்டி கடினமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்.

சுழற்பந்து வீச்சாளர்கள்
இங்கிலாந்துக்கு கிளம்புவதற்கு முன்பாக நடந்த பயிற்சி முகாமில் சில பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தோம். அதிகமாக சுழன்று திரும்பும் பந்துகளை திறம்பட சமாளிப்பது குறித்து பயிற்சி தேவை. இந்த டெஸ்ட் பொதுவான இடத்தில் நடக்கிறது. இங்கு ஆடுகளத்தன்மை எப்படி இருக்கிறது என்பதை முதலில் அறிய வேண்டியது அவசியம். அத்துடன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா சாதுர்யமாக சுழற்பந்து வீசக்கூடியவர்கள். அவர்களை எதிர்கொள்வதற்கு ஏற்ப நாங்கள் தயாராக இருக்க வேண்டியது முக்கியம்.கடந்த ஆண்டு தொடக்கத்தில் எங்கள் நாட்டில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினோம். ஆனால் உலக சாம்பியன்ஷிப் வித்தியாசமான சவால் என்பது தெரியும். இருப்பினும் ஏற்கனவே இந்திய அணியை தோற்கடித்த தொடரில் இருந்து நிறைய நம்பிக்கையை எடுத்து செல்வோம். இறுதி சுற்றில் நம்பர் ஒன், நம்பர்-2 அணிகள் மோதுவது நிச்சயம் சவாலாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

29 வயதான ஹென்றி நிகோல்ஸ் 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 சதம் உள்பட 2,152 ரன்கள் சேர்த்துள்ளார். தனது கடைசி 4 இன்னிங்சில் 174, 56, 11, 157 ரன் வீதம் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story