இங்கிலாந்து ஆடுகளத்தில் பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம் - கோலிக்கு, கபில்தேவ் அறிவுரை


இங்கிலாந்து ஆடுகளத்தில் பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம் - கோலிக்கு, கபில்தேவ் அறிவுரை
x
தினத்தந்தி 28 May 2021 9:55 PM GMT (Updated: 28 May 2021 9:55 PM GMT)

இங்கிலாந்து மண்ணில் அதிக ஆக்ரோஷமாக செயல்படக் கூடாது என இந்திய கேப்டன் கோலிக்கு, கபில்தேவ் அறிவுரை கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. இதையொட்டி இங்கிலாந்து மண்ணில் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விராட் கோலிக்கு, இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். கபில்தேவ் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்திய கேப்டன் விராட் கோலி பொறுமையாக பேட்டிங் செய்ய வேண்டும். அதீத ஆக்ரோஷமாக செயல்படக்கூடாது என்று எச்சரிக்கிறேன். இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் களம் இறங்கிய உடனே ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் ஆடுவது பலன் அளிக்காது. ஏனெனில் அங்கு பந்து நன்கு ‘ஸ்விங்’ ஆகும். அதை துல்லியமாக கணித்து பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம். ஒவ்வொரு பகுதியாக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆதிக்கம் செலுத்த தனக்குரிய தருணத்துக்காக காத்திருக்க வேண்டும். அப்போது தான் அதிக ரன்கள் சேர்க்க முடியும். 

சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்துவது கடினம் என்பதை இந்திய அணிக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் அங்குள்ள ஆடுகளங்களில் எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதை பொறுத்தே முடிவுகள் மாறும். அங்குள்ள மைதானங்களில் பந்து சரமாரியாக ‘ஸ்விங்’ஆகும் என்பதால் இந்த வகையில் இந்திய அணியை விட இங்கிலாந்து வீரர்கள் ஒரு படி மேலே இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story