கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இன்று முடிவு + "||" + BCCI meet today to decide on IPL to continue

ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இன்று முடிவு

ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இன்று முடிவு
இன்று நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்குகிறார். இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி 4 அணியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 4-ந்தேதி இந்த போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன.

தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் வருகிற செப்டம்பர் 18-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதிக்குள் நடத்தி முடித்து விடலாம் என்று திட்டமிட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் அதிகாரபூர்வ தேதி குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படுகிறது.

ஐ.பி.எல். மீண்டும் தொடங்கும் போது அதில் இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கும் நிலையில் இங்கிலாந்து உள்பட வெளிநாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கும் விஷயத்தில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையம் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது.

7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் கொரோனா பரவல் அதிகரிப்பு அதற்கு வழிவிடுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியாமல் போனால் மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. வருகிற 1-ந் தேதி நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட இருக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடாக என்ன தெரிவிக்கலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது. கொரோனா பரவலின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை ஜூலை மாதம் வரை பொறுத்திருந்து பார்த்து அதற்கு தகுந்தபடி முடிவு எடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.சி.சி.யிடம் தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.

கொரோனா பயத்தால் கடந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் வீரர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்தபடி இன்னும் வழங்கப்படவில்லை. அந்த தொகையை வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்; பெங்களூரு அணியின் பயிற்சியாளர் மாற்றம் - புதிய வீரர்கள் தேர்வு
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் மீதமுள்ள ஆட்டங்கள் தொடங்கவுள்ள நிலையில் பெங்களூரு அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2. கொரோனா பாதிப்பால் பாதியில் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்
கொரோனா பாதிப்பால் பாதியில் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி
ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.