சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஆலோசனை


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 31 May 2021 11:54 PM GMT (Updated: 31 May 2021 11:54 PM GMT)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

புதுடெல்லி, 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டம் காணொலி வாயிலாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் அதன் தலைவர் சவுரவ் கங்குலி கலந்து கொள்கிறார். இந்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக எழுந்துள்ளது. இந்த போட்டிக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், இந்த போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வமாக இருக்கிறது. எனவே கொரோனா சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து சரியான முடிவுக்கு வர ஒரு மாத காலம் அவகாசம் வழங்கும்படி பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் வைக்கப்படும் என்று தெரிகிறது.

இதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து இறுதி முடிவு எட்டப்பட வாய்ப்பில்லை. ஜூலை 18-ந் தேதி தொடங்கும் ஐ.சி.சி.யின் வருடாந்திர கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு சாத்தியம் இருக்கிறதா? என்பது குறித்து பி.சி.சி.ஐ. நிர்வாகிகள், மத்திய அரசின் கருத்தை கேட்பதுடன், தங்களது சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை மீண்டும் ஒருமுறை கூட்டி விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.

வரி விலக்கு

இந்தியாவில் நடத்தப்படும் உலக போட்டிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து வரிவிலக்கு பெற்று தர வேண்டும் என்று ஐ.சி.சி. வற்புறுத்தி வருகிறது. சிக்கலான இந்த பிரச்சினையை தீர்க்க பி.சி.சி.ஐ., மத்திய அரசின் உயர் மட்டத்தினரை சந்தித்து முயற்சித்து வருகிறது. ஆனாலும் இந்த விஷயத்தில் இன்னும் முடிவு எதுவும் காண முடியவில்லை. இந்த பிரச்சினை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார பிரச்சினை நிலவும் இந்த சூழ்நிலையில் அரசிடம் இருந்து வரிவிலக்கு பெறுவது என்பது கடினமான காரியமாகும். வரிவிலக்கு பெற முடியாவிட்டாலும், உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை விட்டுக்கொடுக்க பி.சி.சி.ஐ. தயாராக இல்லை. வரிவிலக்கு கிடைக்காத பட்சத்தில் உலக கோப்பை போட்டியின் மூலம் பி.சி.சி.ஐ.க்கு வரவேண்டிய வருவாயில் சுமார் ரூ.900 கோடியை ஐ.சி.சி. பிடித்தம் செய்யும் என்று தெரிகிறது.

அடுத்த 8 ஆண்டுகளுக்கான (2023-2031) வருங்கால போட்டி அட்டவணையை தீர்மானிப்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டதால் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை எப்போது தொடங்கி நடத்தலாம் என்றும் யோசனை செய்யப்படுகிறது.

பெண்கள் கிரிக்கெட்...

கிரிக்கெட் போட்டியை உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் வளர்ப்பது குறித்தும், குறிப்பாக பெண்கள் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்துவது மற்றும் பிரபலப்படுத்துவது பற்றியும் கருத்து பரிமாற்றம் செய்யப்படுகிறது. 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெறுவதற்கு முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் ஆலோசனை நடக்க உள்ளது..

Next Story