இங்கிலாந்து-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் லண்டனில் இன்று தொடக்கம்


இங்கிலாந்து-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் லண்டனில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 1 Jun 2021 11:33 PM GMT (Updated: 2021-06-02T05:03:45+05:30)

இங்கிலாந்து-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் லண்டனில் இன்று தொடங்குகிறது.

லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இங்கிலாந்து-நியூசிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தயாராவதற்கு நியூசிலாந்து அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. 

அந்த அணியில் கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ் இந்த பயணத்துடன் ஓய்வு பெற உள்ள விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆகியோர் பேட்டிங்கிலும், நீல் வாக்னெர், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட், கைல் ஜாமிசன் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் வலுவாக உள்ளனர்.உள்ளூர் சீதோஷ்ண நிலை இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்தாலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடிய பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், மொயீன் அலி ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதும், காயத்துக்கு ஆபரேஷன் செய்ததால் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விலகி இருப்பதும் இங்கிலாந்துக்கு கொஞ்சம் பின்னடைவு தான். 

பேட்டிங்கில் கேப்டன் ஜோ ரூட், ஜாக் கிராவ்லி, டாம் சிப்லி ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் அனுபவ வீரர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், புதிய துணை ேகப்டன் ஸ்டூவர்ட் பிராட் மிரட்டுவதற்கு ஆயத்தமாக உள்ளனர். 38 வயதான ஆண்டர்சனுக்கு இது 161-வது டெஸ்டாகும். இதன் மூலம் இங்கிலாந்து வீரர்களில் அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றவரான அலஸ்டயர் குக்கின் சாதனையை சமன் செய்கிறார்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story