இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் குடும்பத்தினரை அழைத்து செல்ல அனுமதி


இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் குடும்பத்தினரை அழைத்து செல்ல அனுமதி
x
தினத்தந்தி 2 Jun 2021 1:32 AM GMT (Updated: 2 Jun 2021 1:32 AM GMT)

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் குடும்பத்தினரை அழைத்து செல்ல இங்கிலாந்து அரசாங்கம் அனுமதித்துள்ளது.

மும்பை, 

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர் மும்பையில் இருந்து தனிவிமானத்தில் இன்று லண்டனுக்கு புறப்படுகிறார்கள். மிதாலிராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் அணியினரும் சர்வதேச போட்டியில் ஆடுவதற்காக இதே விமானத்தில் இங்கிலாந்துக்கு பயணிக்கிறார்கள்.

தற்போது மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் உள்ள இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்றதும் மறுபடியும் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினரையும் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்திருந்தது. கெரோனா பரவலால் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் சூழலில் வீரர்களுடன் மனைவி, குழந்தைகள் உடன் இருக்கும் போது மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். இதையடுத்து இந்தியாவின் கோரிக்கையை இங்கிலாந்து அரசாங்கம் ஏற்றுக்கொண்டு உள்ளது.

இதன்படி வீரர்களும், பயிற்சி உதவியாளர்களும் தங்களது குடும்பத்தினரை உடன் அழைத்து செல்லலாம். வீராங்கனைகளுக்கும் இது பொருந்தும்.

இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கும் இந்தியா-நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பார்க்க திட்டமிட்டனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக செல்லலாம் என்று நினைத்தனர். ஆனால் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளின்படி 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி உள்ளதால் அவர்கள் இங்கிலாந்துக்கு செல்லமாட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

Next Story