கொரோனாவுக்கு தாய், சகோதரியை பறிகொடுத்த கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி உருக்கம்


கொரோனாவுக்கு தாய், சகோதரியை பறிகொடுத்த கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி உருக்கம்
x
தினத்தந்தி 3 Jun 2021 2:50 AM GMT (Updated: 3 Jun 2021 2:50 AM GMT)

கொரோனாவுக்கு தாய், சகோதரியை பறிகொடுத்த கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி தனது சோக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

பெங்களூரு,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை கர்நாடகாவைச் சேர்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரது தாயார் செலுவம்மாதேவி, சகோதரி வத்சலா ஆகியோர் கடந்த மாதம் 2 வார இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த சோக அனுபவங்களை நேற்று பகிர்ந்து கொண்ட வேதா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘எப்படி எனது குடும்பத்தினருக்குள் கொரோனா பரவியது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. எனது குடும்பத்தில் எனக்கு மட்டும் எந்த பாதிப்பும் இல்லை. ஒவ்வொரு முறையும் ‘நெகட்டிவ்’ முடிவே வந்தது. கொரோனா தாக்காத வகையில் நான் அதிர்ஷ்டசாலி என்று நீங்கள் சொல்லலாம் அல்லது நான் அடிக்கடி கைகளை கழுவிக் கொண்டு இருப்பேன். அதனால் கூட வராமல் இருந்திருக்கலாம். அது எப்படி என்று தெரியவில்லை.

எல்லாம் நமது தலைவிதிப்படி தான் நடக்கும் என்பதில் வலுவான நம்பிக்கை எனக்கு உண்டு. என்றாலும் எனது அக்கா வத்சலா நிச்சயம் மீண்டு நலமுடன் வந்து விடுவார் என்று நம்பினேன். அவரது மறைவு என்னை முற்றிலும் உலுக்கிவிட்டது. என்னை விட14 வயது மூத்தவரான அவர் சிறுவயதில் எனக்கு இன்னொரு அம்மா போன்று இருந்தார். அடுத்தடுத்து மரணங்களால் நாங்கள் அனைவரும் துண்டு துண்டாக உடைந்துபோனோம். கடினமான அந்த நாட்களில் குடும்பத்துக்காக சோகத்தை தாங்கிகொண்டு எனது தைரிய முகத்தை காட்டவேண்டி இருந்தது. ஆனாலும் தொடர்ந்து துக்கம் தொண்டையை அடைக்கிறது. எப்போதும் மனவலிமையுடன் இருப்பது முக்கியமானது. எனது சகோதரி மரணத்துக்கு முன்பாக பயந்து போய் விட்டார்’ என்றார்.

28 வயதான வேதா கிருஷ்ணமூர்த்தி இந்திய அணிக்காக 48 ஒரு நாள் போட்டி மற்றும் 76 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். இங்கிலாந்து தொடருக்கான அணியில் அவர் இடம் பெறவில்லை.

Next Story