இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து புதுமுக வீரர் கான்வே இரட்டை சதம் அடித்து சாதனை


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து புதுமுக வீரர் கான்வே இரட்டை சதம் அடித்து சாதனை
x
தினத்தந்தி 4 Jun 2021 1:20 AM GMT (Updated: 4 Jun 2021 1:20 AM GMT)

லண்டனில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அறிமுக வீரர் கான்வே இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

லண்டன்,

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. புதுமுக வீரர் டிவான் கான்வே (136 ரன்), ஹென்றி நிகோல்ஸ் (46 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய நிகோல்ஸ் 61 ரன்களில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் தொடக்க ஆட்டக்காரர் கான்வே ஒரு பக்கம் போராட, மறுபுறம் அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுக்கு 338 ரன்கள் எடுத்திருந்த போது, கான்வேயின் இரட்டை சதத்திற்கு 14 ரன் தேவையாக இருந்தது. இதைத் தொடர்ந்து கடைசி விக்கெட்டுக்கு இறங்கிய நீல் வாக்னெர் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு தந்ததுடன், அதிரடியும் காட்டினார். அவரது துணையுடன் கான்வே இரட்டை சதத்தை நிறைவு செய்தார். பந்தை சிக்சருக்கு விரட்டி 200 ரன்களை தொட்டார்.

இதன் மூலம் அறிமுக டெஸ்டிலேயே இரட்டை சதம் விளாசிய 7-வது வீரர், நியூசிலாந்து அளவில் 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஏற்கனவே நியூசிலாந்தின் மேத்யூ சின்கிளைர் தனது முதலாவது டெஸ்டில் 214 ரன்கள் (1999-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) எடுத்திருந்தார். அதே சமயம் இங்கிலாந்து மண்ணில் அறிமுக டெஸ்டில் இரட்டை சதம் நொறுக்கிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தினார். இதற்கு முன்பு இங்கிலாந்தின் ரஞ்ஜித்சின்ஜி 1896-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த டெஸ்டில் 154 ரன்கள் எடுத்ததே இங்கிலாந்து மண்ணில் ஒரு அறிமுக வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அந்த 125 ஆண்டு கால சாதனையை 29 வயதான கான்வே முறியடித்துள்ளார்.

இறுதியில் கான்வே 200 ரன்களில் (347 பந்து, 22 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார். முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. வாக்னெர் 25 ரன்களுடன் (21 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 4 விக்கெட்டுகளும், மார்க்வுட் 3 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. ஆட்டநேர முடிவில் அந்த அணி 43 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. ரோரி பர்ன்ஸ் (59 ரன்), கேப்டன் ஜோ ரூட் (42 ரன்) களத்தில் உள்ளனர்.

Next Story