டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பு - வெங்சர்க்கார் பேட்டி


டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பு - வெங்சர்க்கார் பேட்டி
x
தினத்தந்தி 6 Jun 2021 6:38 PM GMT (Updated: 2021-06-07T00:08:33+05:30)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் இல்லாததால் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று முன்னாள் வீரர் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

மும்பை,

முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து இந்திய முன்னாள் வீரரும், 116 டெஸ்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவருமான திலிப் வெங்சர்க்கார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீண்ட காலமாக சிறப்பாக விளையாடி வரும் இந்திய கேப்டன் விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். விராட் கோலி அல்லது ரோகித் சர்மா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் தங்களது அருமையான ஆட்டத்தின் மூலம் ெபருமை சேர்ப்பது மட்டுமின்றி, இந்தியாவுக்கும் வெற்றியை தேடித் தருகிறார்கள். இருவரும் பார்மில் இருப்பது நல்ல விஷயமாகும். ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக பயிற்சி பெறும் வகையில் ஆட்டங்கள் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

இந்தியா சிறந்த அணி, ஆட்டத்திறனும் நன்றாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நியூசிலாந்துக்கு சாதகமான அம்சம் எதுவென்றால் அந்த அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்காது, இதைவிட முக்கியமாக சாம்பியன்ஷிப்புக்கு முன்பாக இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறார்கள். இது தான் நியூசிலாந்துக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கப்போகிறது. அதாவது அங்குள்ள சூழலில் தங்களை நன்கு பழக்கப்படுத்தி இருப்பார்கள்.

இதே போல் இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு முன்பாக இந்தியாவும் 2-3 போட்டிகளில் ஆடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்னதான் வலை பயிற்சிகளில் ஈடுபட்டாலும் போட்டியில் களம் இறங்கி ஆட்ட சூழலில் கிடைக்கும் அனுபவம் தான் எப்போதும் உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெங்சர்க்கார் அளித்த மற்ெறாரு பேட்டியில் கூறுகையில், ‘இரு அணி வீரர்களை ஒப்பிடும் போது இந்திய அணியே பார்க்க வலுவாக தெரிகிறது. நியூசிலாந்து அணியின் டிரென்ட் பவுல்ட் உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர், அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இந்தியாவை பொறுத்தமட்டில் ஒரு முழுமையான அணியாக தோன்றுகிறது. நம்மிடம் தரமான சுழற்பந்து வீச்சாளர்களும் (அஸ்வின், ஜடேஜா), சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் (பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ்), திறமையான பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள்.

கோலி, ரோகித் சர்மா அற்புதமான பேட்ஸ்மேன்கள் என்றாலும் மற்ற வீரர்களும் பங்களிப்பு அளிக்க வேண்டியது முக்கியம். ஏனெனில் ஒன்று, இரண்டு வீரர்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது. நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால், அதில் ஒவ்வொருவரும் பங்களிப்பு அளித்தாக வேண்டும்.’ என்றார்.

Next Story