இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கு ரஷித் கான் புகழாரம்


இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கு ரஷித் கான் புகழாரம்
x
தினத்தந்தி 8 Jun 2021 2:29 AM GMT (Updated: 8 Jun 2021 2:29 AM GMT)

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கு ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் புகழாரம் சூட்டினார்.

அபுதாபி,

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் நன்றாக பந்து வீசி நெருக்கடி கொடுக்கும் போது அவர்கள் தனக்கு சாதகமில்லாத ஷாட்களையும் ஆடுவார்கள். ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அப்படிப்பட்டவர் கிடையாது. எந்த மாதிரியான சூழ்நிலையிலும் அவர் தனது இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்துவார். அவர் தனது வழக்கமான பாணி ஆட்டத்தை விடுத்து வித்தியாசமாக எதுவும் செய்யமாட்டார். விராட்கோலி தனக்கு சொந்தமான நடைமுறையில் இருந்து விலகாமல் இருப்பது தான் அவரது மிகச் சிறந்த வெற்றிகரமான செயல்பாட்டுக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். நல்ல பந்து வீச்சை மதிக்கக்கூடிய அவர் மோசமான பந்து வீச்சை தண்டிக்கவும் செய்வார். விராட்கோலி நல்ல தன்னம்பிக்கை கொண்டவர். சில பேட்ஸ்மேன்கள் தன்னம்பிக்கை இல்லாததால் தான் தடுமாறுகிறார்கள். ஐ.பி.எல். போட்டியில் டோனியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்பது எனது கனவாகும். பவுலர்களுக்கு சிறப்பான ஆலோசனை வழங்கக்கூடிய டோனியுடன் இணைந்து விளையாடுவது என்பது மிகவும் முக்கியமானதாகும். டோனிக்கு எதிராக விளையாடிய ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் அவருடன் விவாதிப்பது எனக்கு உதவிகரமாக இருந்துள்ளது. கடந்த முறை அவர் என்னிடம் பேசுகையில் பீல்டிங்கின் போது ஆக்ரோஷத்தை குறைத்து கவனமுடன் செயல்பட்டால் காயத்தை தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தினார். மற்ற பேட்ஸ்மேன்களை விட பந்தை கணித்து அடிப்பதில் ரோகித் சர்மா சிறப்பானவர்’ என்று தெரிவித்தார்.

Next Story