டுவிட்டரில் இனவெறி கருத்து: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் ராபின்சன் இடைநீக்கம்


டுவிட்டரில் இனவெறி கருத்து: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் ராபின்சன் இடைநீக்கம்
x
தினத்தந்தி 8 Jun 2021 2:37 AM GMT (Updated: 8 Jun 2021 2:37 AM GMT)

டுவிட்டரில் இனவெறி கருத்தை பதிவிட்டதால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் ராபின்சன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

லண்டன், 

லண்டன் லார்ட்சில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்த 27 வயது வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் மொத்தம் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், முதல் இன்னிங்சில் 42 ரன்னும் எடுத்து அசத்தினார். அவரது ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்ட வேளையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு அவர் டுவிட்டரில் போட்ட பதிவுகள் தற்போது அவருடைய நன்மதிப்பை சீர்குலைத்து இருப்பதுடன் அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இனமக்களை தீவிரவாதிகளுடன் தொடர்பு படுத்தியும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் அவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டது அவரது அறிமுக ஆட்டம் அரங்கேறிய முதல் நாளில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததுடன், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். தனது செயலுக்காக ஆலி ராபின்சன் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். நான் இனவெறி பிடித்தவன் இல்லை. இளம் பருவத்தில் நான் தெரியாமல் தவறு இழைத்து விட்டேன். தற்போது முதிர்ச்சி அடைந்து விட்டேன். தனது மோசமான செயலுக்காக அணி வீரர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

இந்த நிலையில் இனவெறி சர்ச்சையில் சிக்கிய ஆலி ராபின்சன் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவர் அணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். கவுண்டி போட்டிக்கு திரும்பும் அவர் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆலி ராபின்சன் மீதான சர்ச்சை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடிவில் தான் அவருக்கு அபராதம் விதிக்கப்படுமா? அல்லது எத்தனை மாதம் தடை விதிக்கப்படும் என்பது தெரியவரும்.

இந்த சம்பவம் குறித்து இங்கிலாந்து விளையாட்டு துறை மந்திரி ஆலிவர் டோவ்டென் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘ராபின்சன் செய்தது தவறு தான். பல ஆண்டுகளுக்கு முன்பு இளம் வயதில் நடந்த சம்பவத்துக்காக தற்போது அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதீத நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஆலிவர் டோவ்டென் கருத்துக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆதரவு தெரிவித்து இருப்பதாக அவருடைய செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Next Story