நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் டிரா: வெற்றி இலக்கை எட்ட முடியாது என்பதால் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டோம் - இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டி


நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் டிரா: வெற்றி இலக்கை எட்ட முடியாது என்பதால் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டோம் - இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டி
x
தினத்தந்தி 8 Jun 2021 2:54 AM GMT (Updated: 8 Jun 2021 2:54 AM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெற்றி இலக்கை எட்டிப்பிடிக்க முடியாது என்பதை உணர்ந்ததால் தான் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்தார்.

லண்டன்,

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 378 ரன்களும், இங்கிலாந்து 275 ரன்களும் எடுத்தன. இதனை அடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளைக்கு முன்பு 6 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 75 ஓவர்களில் இந்த வெற்றி இலக்கை எட்டுவது கடினம் என்பதை உணர்ந்த இங்கிலாந்து அணியினர் தடுப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 70 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. டாம் சிப்லி 60 ரன்னுடனும் (207 பந்து, 3 பவுண்டரி), ஆலி போப் 20 ரன்னுடனும் (41 பந்து 3 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அறிமுக டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 200 ரன்கள் குவித்து சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் டிவான் கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றார். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கருத்து தெரிவிக்கையில், ‘நியூசிலாந்து அணியினர் நிர்ணயித்த இலக்கை பார்க்கையில் ஆட்டத்தின் முடிவு எப்படி வேண்டுமானாலும் போகலாம் என்பது போல் தான் இருந்தது. ஆனால் இந்த போட்டி முழுவதும் நீங்கள் ரன் ரேட்டை பார்த்தீர்கள் என்றால், பிட்ச் நன்றாக இருக்கும் போது கூட யாரும் ஒரு ஓவருக்கு 3 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. தொடக்க கட்டத்தை கடந்த பிறகு இந்த ஆடுகளத்தில் வெற்றி இலக்கை விரட்டி பிடிப்பது யதார்த்தமானது இல்லை என்பது புரிந்தது. இதனால் தான் நாங்கள் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினோம். அடுத்த ஆட்டத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்’ என்றார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தனர். எதிர்பாராதவிதமாக நினைத்த முடிவு கிடைக்கவில்லை. மழையால் ஒரு நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டதும் பாதகமாக அமைந்தது. வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் டிக்ளேர் செய்தோம். பிட்ச்சில் மாற்றம் ஏற்பட்டு விரைவாக விக்கெட் சரியும் என்று நினைத்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இங்கிலாந்து அணியினரின் தரமும், அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினம் என்பதும் எங்களுக்கு தெரியும். அடுத்த ஆட்டத்தில் நாங்கள் புத்துணர்ச்சியுடன், புதிய திட்டங்களுடன் களம் இறங்க வேண்டியது முக்கியமானதாகும்’ என்று தெரிவித்தார்.

Next Story