டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 3 வாரம் ஓய்வு அளிக்க முடிவு


டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 3 வாரம் ஓய்வு அளிக்க முடிவு
x
தினத்தந்தி 9 Jun 2021 12:24 AM GMT (Updated: 9 Jun 2021 12:24 AM GMT)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது.

லண்டன், 

இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி முடிந்ததும் இந்திய அணி அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் ஆகஸ்டு 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுடன் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தில் (பயோ-பபுள்) இருந்த இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்றதும் மறுபடியும் பயோ-பபுளில் இணைந்துள்ளனர். மைதானத்தை ஒட்டியுள்ள ஓட்டலில் தங்கியுள்ள இந்திய வீரர்கள் மைதானத்தை தவிர வேறு எங்கும் செல்ல அனுமதி கிடையாது. ‘பயோ-பபுள் வாழ்க்கை மிகவும் கடினமானது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்ததும் கிடைக்கும் ஓய்வு நிச்சயம் உற்சாகம் அளிக்கும். இத்தகைய நீண்ட தொடரில் வீரர்கள் புத்துணர்ச்சியுடன் மீண்டும் ஒருங்கிைணவதற்கு இந்த இடைவெளி அவசியமாகும்’ என்று இந்திய கேப்டன் விராட் கோலி ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்ததும் இந்திய வீரர்களுக்கு 3 வாரங்கள் ஓய்வு அளிக்க அணி நி்ர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் பிறகு ஜூலை 14-ந்தேதி வீரர்கள் மீண்டும் இணைவார்கள்.

ஓய்வு நாட்களில் வீரர்கள் பயோ-பபுளில் இருக்க வேண்டிய தேவையில்லை. பெரும்பாலான வீரர்கள் குடும்பத்தினருடன் இங்கிலாந்துக்கு சென்றிருப்பதால் ஜாலியாக வெளியில் சுற்றி பார்க்க திட்டமிட்டுள்ளனர். பல வீரர்கள் ஏற்கனவே 2-3 தடவை இங்கிலாந்துக்கு சென்று வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு இங்கு நிறைய நண்பர்களும் உள்ளனர். அவர்களையும் சந்தித்து பேசி நேரத்தை செலவிட இந்த ஓய்வு வாய்ப்பாக அமையும். ஆனால் கொரோனா பரவல் இன்னும் இருப்பதால் வெளியில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Next Story