கிரிக்கெட்

உலகின் சிறந்த டெஸ்ட் தொடராக இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி தேர்வு ஐ.சி.சி. தகவல் + "||" + As the best Test series in the world India-Australia match selection ICC Information

உலகின் சிறந்த டெஸ்ட் தொடராக இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி தேர்வு ஐ.சி.சி. தகவல்

உலகின் சிறந்த டெஸ்ட் தொடராக இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி தேர்வு ஐ.சி.சி. தகவல்
2020-21-ம் ஆண்டில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் உலகின் சிறந்த டெஸ்ட் போட்டி தொடராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
துபாய், 

விரைவில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அரங்கேற உள்ள நிலையில் இதுவரை நடந்துள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலேயே உச்சக்கட்டமாக மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எது? என்பதை அறிய சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்தது. இதையொட்டி 144 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பரபரப்பாகவும், திரில்லிங்காகவும் அமைந்த 16 தொடர்களை அடையாளம் கண்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் 1882-ம் ஆண்டு, 1932-ம் ஆண்டுகளில் நடந்த போட்டிகளும் இடம் பிடித்தன.

இவற்றில் இருந்து இந்தியா-ஆஸ்திரேலியா 2001-ம் ஆண்டு தொடர், இந்தியா-ஆஸ்திரேலியா 2020-21-ம் ஆண்டு தொடர், இந்தியா-பாகிஸ்தான் 1999-ம் ஆண்டு தொடர், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து 2005-ம்ஆண்டு ஆஷஸ் தொடர் ஆகியவை அரைஇறுதிக்கு முன்னேறின. இதில் இருந்து நீயா-நானா இறுதிசுற்றில் இந்தியா-ஆஸ்திரேலியா (2020-21), இந்தியா-பாகிஸ்தான் (1999) தொடர்கள் மல்லுகட்டின.

உச்சக்கட்ட டெஸ்ட் தொடரை தேர்வு செய்வதற்காக உலகம் முழுவதும் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் தங்களது ஓட்டுகளை ஆர்வமுடன் பதிவிட்டனர். இதன் முடிவில் 2020-21-ம் ஆண்டில் நடந்த முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் சிறந்த தொடருக்கான அங்கீகாரத்தை தட்டிச் சென்றது. இதனை ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்தியா சாதித்தது எப்படி?

2020-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2021-ம் ஆண்டு ஜனவரி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்ததை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்டில் 2-வது இன்னிங்சில் இந்தியா வெறும் 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. டெஸ்டில் இந்தியாவின் குறைந்த ஸ்கோர் இது தான்.

குழந்தை பிறப்புக்காக முதலாவது டெஸ்டுடன் இந்திய கேப்டன் விராட் கோலி தாயகம் திரும்பினார். போட்டி கடைசி கட்டத்தை நெருங்குவதற்குள் முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, அஸ்வின், ஹனுமா விஹாரி என்று ஒவ்வொரு முன்னணி வீரர்களாக காயத்தில் சிக்கினர். ஆனாலும் பொறுப்பு கேப்டன் அஜிங்யா ரஹானே தலைமையில் இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு அவர்களது இடத்திலேயே ‘தண்ணி’ காட்டியது. குறிப்பாக பிரிஸ்பேனில் 32 ஆண்டுகளாக தோல்வியே சந்திக்காமல் வலம் வந்த ஆஸ்திரேலியாவின் கோட்டையை தகர்த்தது. அங்கு நடந்த கடைசி டெஸ்டில் 328 ரன்கள் இலக்கை இந்திய அணி ரிஷாப் பண்டின் (89 ரன்) அதிரடியோடு 3 விக்கெட் வித்தியாசத்தில் எட்டிப்பிடித்து அசத்தியது. டி.நடராஜன், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், சுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர் ஆகிய புதுமுக வீரர்களின் ஆட்டம் வெகுவாக கவனத்தை ஈர்த்தன. இந்த போட்டியின் முடிவு அனைவரையும் பரவசப்படுத்தின. அதனால் தான் ரசிகர்கள் அதிக அளவில் ஓட்டு போட்டு இதை மிகச்சிறந்த தொடராக தேர்வு செய்திருக்கிறார்கள்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி

2-வது இடத்தை பிடித்த இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி 1999-ம் ஆண்டில் இந்திய மண்ணில் நடந்தது. இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் நிறைவடைந்தது. இதில் டெல்லியில் நடந்த டெஸ்டில் ஒரு இன்னிங்சில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே 10 விக்கெட்டுகளையும் சாய்த்து சரித்திரம் படைத்தது நினைவு கூரத்தக்கது.