இந்தியர்களை டுவிட்டரில் கிண்டல்: சர்ச்சையில் சிக்கும் மோர்கன், பட்லர்


இந்தியர்களை டுவிட்டரில் கிண்டல்: சர்ச்சையில் சிக்கும் மோர்கன், பட்லர்
x
தினத்தந்தி 10 Jun 2021 2:50 AM GMT (Updated: 10 Jun 2021 2:50 AM GMT)

இங்கிலாந்து ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் இயான் மோர்கன், அதிரடி விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஆகியோரும் தாங்கள் முன்பு வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளால் பிரச்சினையில் சிக்குகிறார்கள்.

லண்டன், 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் தனது இளம் வயதில் இனவெறி மற்றும் பெண்கள் குறித்து ஆபாசமாக வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளால் சர்ச்சையில் சிக்கினார். அவரை உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இடைநீக்கம் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்து ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் இயான் மோர்கன், அதிரடி விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஆகியோரும் தாங்கள் முன்பு வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளால் பிரச்சினையில் சிக்குகிறார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மோர்கன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் கோடிக்கணக்கில் ஊதியம் பெற்று விளையாடுகிறார்கள். அவர்கள் ஐ.பி.எல். போட்டியில் ஆடிய போது, இந்தியர்கள் ஆங்கிலம் பேசும் விதத்தை கேலி செய்யும் வகையில் சமூக வலைதளமான டுவிட்டரில் பதிவிட்டு உரையாடியுள்ளனர். அதாவது, ‘சார்’ என்ற வார்த்தையை வேண்டுமென்றே இந்தியர்களின் ஆங்கில புலமையை கிண்டல் செய்வதற்காக அடிக்கடி பயன்படுத்தியது சர்ச்சையாக எழுந்துள்ளது. இதனால் தர்மசங்கடத்திற்குள்ளாகி இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது. இதே போல் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லமும் (நியூசிலாந்து) சரியாக ஆங்கிலம் தெரியாத சில இந்திய ரசிகர்கள் போன்று ஆங்கிலத்தில் டுவிட் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

Next Story