உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.11¾ கோடி பரிசு - ஐ.சி.சி.அறிவிப்பு


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.11¾ கோடி பரிசு - ஐ.சி.சி.அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2021 10:43 PM GMT (Updated: 14 Jun 2021 10:43 PM GMT)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¾ கோடி பரிசாக வழங்கப்படும் என்று ஐ.சி.சி.அறிவித்தது.

துபாய்,

9 அணிகள் பங்கேற்ற முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இவ்விரு அணிகள் இடையிலான இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்காக இந்தியா, நியூசிலாந்து அணிகள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசுத்தொகை எவ்வளவு? என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¾ கோடி பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கதாயுதம் முன்பு உலக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் அணிக்கு வழங்கப்பட்டு வந்தது நினைவிருக்கலாம். இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.5¾ கோடியும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3¼ கோடியும், 4-வது இடம் வகிக்கும் அணிக்கு ரூ.2½ கோடியும், 5-வது இடம் பெறும் அணிக்கு ரூ.1½ கோடியும் பரிசாக கிடைக்கும். எஞ்சிய 4 அணிகள் தலா ரூ.73 லட்சத்தை பரிசாக பெறும். இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் சாம்பியன் மற்றும் 2-வது இடம் பெறும் அணிக்கு வழங்கப்படக்கூடிய பரிசுத் தொகையை மொத்தமாக சேர்த்து இரு அணிகளுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படும். அத்துடன் கதாயுதம் இரு அணிகளின் வசமும் சமமான காலம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story