டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்


டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்
x
தினத்தந்தி 16 Jun 2021 2:25 AM GMT (Updated: 16 Jun 2021 2:25 AM GMT)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதுடெல்லி,

என்னை பொறுத்தவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் 2 சுழற்பந்து வீச்சாளர்களாலும் (அஸ்வின், ரவீந்திர ஜடேஜா) பேட்டிங்கும் செய்ய முடியும். ஆடுகளம் 4-வது மற்றும் 5-வது நாளில் சுழலுக்கு ஒத்துழைக்காவிட்டால் என்ன செய்வது என்று கேட்கிறீர்கள்.

பந்து அதிகமாக சுழன்று திரும்பாத ஆடுகளங்களிலும் ஷேன் வார்னே, முரளிதரன் போன்றோர் நிறைய விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்கள். சுழல் இன்றி நேராக செல்லக்கூடிய வகையில் வீசப்படும் பந்து வீச்சிலும் வித்தியாசங்களை காண்பிக்க முடியும். ஸ்டம்பை குறி வைத்து நேராக வீசும் பந்துகள் சுழன்று திரும்புமா அல்லது அப்படியே வருமா என்ற குழப்பத்தில் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழக்க வாய்ப்பு உண்டு. ஒரு ஆப்-ஸ்பின்னர் நேராக பந்தை வீசும்போது பேட்டின் முனையில் பட்டு ஸ்லிப்பிலோ அல்லது விக்கெட் கீப்பரிடமோ கேட்ச் ஆகலாம்.

இங்கிலாந்து மண்ணில் காற்றின் போக்குக்கு ஏற்ப சுழற்பந்து வீச்சாளர்கள் நிறைய சாதிக்க முடியும். காற்றுடன் கூடிய சீதோஷ்ண நிலையில் பந்து வீசும் போது பந்து நேராக செல்வது போல் தோன்றும். ஆனால் காற்றில் நகர்ந்து பிட்ச் ஆனதும் திரும்பி விடும். பந்தை தொடர்ந்து பளபளப்புடன் வைத்திருந்தால் காற்றின் தாக்கத்தில் இரண்டு பக்கமும் பந்தை திரும்ப வைக்கலாம். இந்த சூழலை அஸ்வின், ஜடேஜா சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.

Next Story