கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து அர்ஜென்டினா-சிலி ஆட்டம் ‘டிரா’ + "||" + Copa America Football Argentina-Chile match 'Draw'

கோபா அமெரிக்கா கால்பந்து அர்ஜென்டினா-சிலி ஆட்டம் ‘டிரா’

கோபா அமெரிக்கா கால்பந்து அர்ஜென்டினா-சிலி ஆட்டம் ‘டிரா’
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா-சிலி அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ரியோடிஜெனீரோ,

தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

ரியோடிஜெனீரோவில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா-சிலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 33-வது நிமிடத்தில் கோல் அடித்தது. ‘பிரிகிக்’ வாய்ப்பில் அந்த அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி 25 மீட்டர் தூரத்தில் இருந்து இடது காலால் உதைத்த பந்து, வரிசையாக அரண் போல் நிறுத்தப்பட்டிருந்த வீரர்களை தாண்டி, கோல் கீப்பரையும் ஏமாற்றி பிரமாதமாக கோலுக்குள் புகுந்தது. பிரிகிக் வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி அடித்த 57-வது கோல் இதுவாகும். இதன் மூலம் பிரிகிக்கில் அதிக கோல் அடித்தவர்களில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவை (56 கோல்கள்) முந்தினார்.

57-வது நிமிடத்தில் சிலி அணி பதிலடி கொடுத்தது. பெனால்டி வாய்ப்பில் அர்துரோ விடால் அடித்த ஷாட்டை அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்டினஸ் கையால் தடுத்தார். ஆனால் அவரது தடுப்பை மீறிய பந்து கம்பத்தில் பட்டு திரும்பியது. அதனை மற்றொரு சிலி வீரர் எட்வர்டோ வர்காஸ் தலையால் முட்டி கோலாக்கினார். அதன் பிறகு அர்ஜென்டினா அணியினர் பல கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அதனை நேர்த்தியாக நிறைவு செய்ய முடியாமல் கோட்டை விட்டனர். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ வில் முடிந்தது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பராகுவே-பொலிவியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பந்து பெரும்பாலும் (79 சதவீதம்) பராகுவே அணியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் முதல் பாதியில் அந்த அணியால் எதிரணியின் தடுப்பு அரணை தகர்த்து கோல் அடிக்க முடியவில்லை. தடுப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்திய பொலிவியா அணி 10-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோல் போட்டது. அந்த அணி வீரர் இர்வின் சாவித்ரா இந்த கோலை அடித்தார்.

பிற்பாதியில் பராகுவே அணி அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்து அசத்தியது. அந்த அணி வீரர்கள் அலிஜான்ட்ரோ ரோமிரோ 62-வது நிமிடத்திலும், ஏஞ்சல் ரோமிரோ 65-வது மற்றும் 80-வது நிமிடங்களிலும் கோல் போட்டனர் முடிவில் பராகுவே 3-1 என்ற கோல் கணக்கில் பொலிவியை தோற்கடித்தது. முன்னதாக பிற்பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் பொலிவியா வீரர் ஜாமி குல்லார் எதிரணி வீரரை பவுல் செய்ததால் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது.