இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான டெஸ்ட்: போராடி டிரா செய்தது இந்தியா


இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான டெஸ்ட்: போராடி டிரா செய்தது இந்தியா
x
தினத்தந்தி 20 Jun 2021 1:27 AM GMT (Updated: 20 Jun 2021 1:27 AM GMT)

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டலில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 231 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனால் 165 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 24.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்து இருந்தபோது மழையால் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஷபாலி வர்மா 55 ரன்னுடனும், தீப்தி ஷர்மா 18 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஷபாலி வர்மா 63 ரன்னிலும், தீப்தி ஷர்மா 54 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. இந்திய அணி 189 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் களம் கண்ட அறிமுக வீராங்கனை சினே ராணா நிலைத்து நின்று ஆடி முதல் அரைசதத்தை கடந்ததுடன் அணியையும் தோல்வியில் இருந்து காப்பாற்றினார். அவருடன் ஜோடி சேர்ந்த தானியா பாட்டியா பக்கபலமாக இருந்தார். இந்திய அணி 2-வது இன்னிங்சில் 121 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்து இருந்த போது போட்டி டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. சினே ராணா 80 ரன்னுடனும், தானியா பாட்டியா 44 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இரண்டு இன்னிங்சிலும் (96, 63) அரைசதம் அடித்து அசத்திய இந்திய இளம் வீராங்கனை ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருது பெற்றார்.

Next Story