மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் ஷபாலி வர்மா இந்திய அணியில் முக்கிய வீராங்கனையாக இருப்பார்


மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் ஷபாலி வர்மா இந்திய அணியில் முக்கிய வீராங்கனையாக இருப்பார்
x
தினத்தந்தி 20 Jun 2021 11:16 PM GMT (Updated: 2021-06-21T04:46:04+05:30)

இங்கிலாந்துக்கு எதிரான பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி போராடி டிரா செய்தது.

பிரிஸ்டல்,

பிரிஸ்டலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி போராடி டிரா செய்தது. இதில் 2-வது இன்னிங்சில் ஒரு கட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 199 ரன்களுடன் தத்தளித்த நிலையில் 8-வது வரிசையில் களம் புகுந்த புதுமுக வீராங்கனை சினே ராணா 80 ரன்கள் குவித்து அணிைய தோல்வியில் இருந்து காப்பாற்றினார். இரு இன்னிங்சிலும் அரைசதம் விளாசிய இந்திய தொடக்க வீராங்கனை 17 வயதான ஷபாலி வர்மா (96 மற்றும் 63 ரன்) அறிமுக டெஸ்டிலேயே ஆட்டநாயகி விருது பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். பின்னர் இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘வருங்காலத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) இ்ந்திய பேட்டிங் வரிசையில் மிக மிக முக்கியமான வீராங்கனையாக ஷபாலி வர்மா இருப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு மிக நேர்த்தியாக விளையாடினார். 20 ஓவர் கிரிக்கெட்டில் தடாலடியாக ஆடுவது போன்று இல்லாமல் புதிய பந்தில் சாதுர்யமாக செயல்பட்டார். இது அவருக்கு சிறப்பானதாக இருக்கும்.

பெண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டை 4 நாளுக்கு பதிலாக 5 நாள் கொண்டதாக மாற்ற வேண்டும் என்று இ்ங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் கூறியது நல்ல யோசனை தான். ஆனால் பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். தொடரில் ஒரு டெஸ்ட் போட்டி இருப்பது முக்கியம். அதன் பிறகு 5 நாள் போட்டியாக மாற்றலாம்.

அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளோம். டெஸ்ட் போட்டியில் போராட்டம் அளித்த விதம் மனரீதியாக எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. அதே சமயம் இங்கிலாந்துக்கு நிச்சயம் நெருக்கடியாக இருக்கும். ஏனெனில் பேட்டிங்கில் எங்களது முன்னணி வீராங்கனைகள் சரியாக ஆடாத போதும் கூட கடைசிகட்ட வீராங்கனைகள் கலக்கியிருப்பதை அவர்கள் அறிவார்கள். இந்தியாவின் பேட்டிங் வாரிசை இப்போது இன்னும் வலுவடைந்துள்ளது. டாப் வரிசை மட்டுமின்றி பின்வரிசை வீராங்கனைகளாலும் வெற்றிக்குரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியும்’ என்றார்.

Next Story