பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து யூனிஸ்கான் விலகல்


பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து யூனிஸ்கான் விலகல்
x
தினத்தந்தி 22 Jun 2021 11:53 PM GMT (Updated: 22 Jun 2021 11:53 PM GMT)

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் யூனிஸ்கான் திடீரென பதவியில் இருந்து விலகியுள்ளார்.

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் 43 வயதான யூனிஸ்கான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். 2022-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை அவரது ஒப்பந்தம் இருந்தது.

இந்த நிலையில் அவர் திடீரென பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக ஒதுங்கிய அவர் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. வருங்கால போட்டிகளுக்கு அணியை தயார்படுத்தும் விதம் பிடிக்காததால் அவர் பதவியை துறந்துள்ளதாக கூறப்படுகிறது.

வருகிற 25-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்படும் பாகிஸ்தான் அணி அங்கு 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீசுக்கு பயணித்து ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டுகளில் ஆடுகிறது. பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு பேட்டிங் பயிற்சியாளர் இன்றி செல்லும் என்றும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பேட்டிங் பயிற்சியாளர் நியமிப்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

Next Story