வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியது


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியது
x
தினத்தந்தி 23 Jun 2021 12:07 AM GMT (Updated: 23 Jun 2021 12:07 AM GMT)

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியது.

செயின்ட் லூசியா,

செயின்ட் லூசியாவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் 324 ரன்கள் இலக்கை நோக்கி 4-வது நாளில் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 58.3 ஓவர்களில் 165 ரன்னில் முடங்கியது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா 158 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

தென்ஆப்பிரிக்கா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் ‘ஹாட்ரிக்’ உள்பட 5 விக்கெட்டுகளை அள்ளினார். டெஸ்ட் போட்டியில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய 2-வது தென்ஆப்பிரிக்க பவுலர் என்ற பெருமையை மகராஜ் பெற்றார். இதற்கு முன்பு 1960-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜியோப் கிரிபின் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூரில் தோல்வியை தழுவிய வெஸ்ட் இண்டீசுக்கு மேலும் ஒரு இடியாக, பந்து வீச கூடுதல் நேரம் எடுத்து கொண்டதற்காக போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.

Next Story