இந்திய டெஸ்ட் அணியில் விரைவில் மாற்றம் - கேப்டன் விராட் கோலி பேட்டி


இந்திய டெஸ்ட் அணியில் விரைவில் மாற்றம் - கேப்டன் விராட் கோலி பேட்டி
x
தினத்தந்தி 24 Jun 2021 10:08 PM GMT (Updated: 2021-06-25T03:38:09+05:30)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி எதிரொலியாக இந்திய டெஸ்ட் அணியில் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று கேப்டன் விராட் கோலி சூசகமாக தெரிவித்துள்ளார்.

சவுத்தம்டன்,

இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடந்த முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் மகுடத்தை உச்சிமுகர்ந்தது. ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில் கடைசி நாளில் நியூசிலாந்து பவுலர்களின் மிரட்டலான பந்து வீச்சால் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 170 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 139 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 45.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 52 ரன்களும், ராஸ் டெய்லர் 47 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். மொத்தம் 7 விக்கெட்டுகளை சாய்த்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் ஆட்டநாயகன் விருது ெபற்றார்.

கடந்த 2 ஆண்டுகளாக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் இந்தியாவின் அஸ்வினும் (71 விக்கெட்), அதிக ரன்கள் குவித்தவர்களில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேனும் (1,675 ரன்) முதலிடம் பிடித்துள்ளனர்.

மழை மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சீதோஷ்ண நிலையை கவனத்தில் கொண்டு நியூசிலாந்து அணி பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி 5 வேகப்பந்து வீச்சாளர்களை களம் இறக்கி அமர்க்களப்படுத்தியது. ஆனால் இந்தியா 3 வேகம், 2 சுழல் என்ற பார்முலாவை கையில் எடுத்தது. அதற்கு பலன் கிைடக்காமல் போய் விட்டது. தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

மழை காரணமாக ஆட்டம் அடிக்கடி தடைப்பட்டது. அதனால் சீரான வேகத்தில் ரன்களை சேர்க்க முடியவில்லை. முழுமையாக நடந்திருந்தால் உத்வேகம் குறையாமல் இன்னும் நிறைய ரன்கள் எடுத்திருக்கலாம்.

இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க எடுத்த முடிவு சரியானது தான். இது போன்ற சீதோஷ்ண நிலைக்கு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் தேவை. இதே அணியை வைத்து தான் பல்வேறு அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று இருக்கிறோம். இதனால் எங்களது பேட்டிங் வரிசையும் வலுப்பெறுகிறது. மழை குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் இன்னும் அதிகமான ஓவர்கள் பந்து வீசி விக்கெட்டுகள் வீழ்த்தி இருப்பார்கள். ஆனால் இறுதிப்போட்டியில் அதற்கான சந்தர்ப்பம் உருவாகவில்ைல. எனவே 2 சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ததில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

நியூசிலாந்து அணிக்கும், வில்லியம்சனுக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 நாட்களுக்குள் வெற்றியை பெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். போட்டி முழுவதும் எங்களை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள். கடைசி நாளில் அவர்களது பந்து வீச்சாளர்கள் திட்டத்தை கனகச்சிதமாக ெசயல்படுத்தினர். எங்களுக்கு ரன் எடுக்கும் வாய்ப்பையே தரவில்லை. இன்னும் 30-40 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் அது நல்ல இலக்காக இருந்திருக்கும்.

தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்வோம். டெஸ்ட் அணியை வலுப்படுத்த என்ன தேவை என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம். அடுத்த திட்டத்திற்காக ஓராண்டு வரை காத்திருக்க மாட்டோம். இப்போது எங்களது ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணிைய பாருங்கள். அந்த வடிவிலான போட்டியில் வலுவாக உள்ளோம். திறமையை ெவளிப்படுத்த தயாராகவும், நம்பிக்கையுடனும் நிறைய வீரர்கள் உள்ளனர். அதே போல் டெஸ்ட் அணிையயும் தயார்படுத்த வேண்டியது அவசியம். அணிக்கு எந்த மாதிரியான வீரர்கள் பொருத்தமாக இருப்பார்கள், துணிச்சலுடன் சவாலை எதிர்கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும். சரியான மனநிலையுடன் உள்ள வீரர்களை அணிக்கு கொண்டு வர வேண்டும்.

ரன்கள் அடிப்பதில் தான் கவனம் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். தடுப்பாட்டத்தின் மூலம் எதிரணி பந்து வீச்சாளர்களின் கையை ஓங்க விடக்கூடாது. அதிரடியாக விளையாடி அவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டும். விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் அச்சமின்றி விளையாட வேண்டும்.

உலகின் சிறந்த டெஸ்ட் அணியை ஒரு போட்டியின் மூலம் முடிவு செய்வது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. 3 போட்டிகள் கொண்ட தொடராக இருக்கும் பட்சத்தில் உண்மையான திறமையை சோதித்து பார்க்க முடியும். அதாவது எந்த அணிக்கு சரிவில் இருந்து மீளும் திறமை இருக்கிறது அல்லது எந்த அணி முற்றிலும் வீழ்த்தப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறைந்தது 3 ஆட்டங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கோலி கூறினார்.

Next Story