இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது


இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 26 Jun 2021 1:07 AM GMT (Updated: 26 Jun 2021 1:07 AM GMT)

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

கார்டிப்,

இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் ‘பேட்’ செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக குசல் மென்டிஸ் 39 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 36 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன் பின்னர் மழை குறுக்கிட்டு 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டதால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 2 ஓவர் குறைக்கப்பட்டு இங்கிலாந்து அணிக்கு 18 ஓவர்களில் 103 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிக்சர் விளாசி இலக்கை கடக்க வைத்த சாம் கர்ரன் 16 ரன்னுடனும், லியாம் லிவிங்ஸ்டோன் 29 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஆட்டம் சவுத்தம்டனில் இன்று நடக்கிறது. இதற்கிடையே காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Next Story