இலங்கை கிரிக்கெட் தொடர் திறமையை வெளிப்படுத்த இந்திய இளம் வீரர்களுக்கு அருமையான வாய்ப்பு - கேப்டன் தவான் பேட்டி


இலங்கை கிரிக்கெட் தொடர் திறமையை வெளிப்படுத்த இந்திய இளம் வீரர்களுக்கு அருமையான வாய்ப்பு - கேப்டன் தவான் பேட்டி
x
தினத்தந்தி 28 Jun 2021 12:28 AM GMT (Updated: 28 Jun 2021 12:28 AM GMT)

இலங்கைக்கு எதிரான தொடர் இந்திய இளம் வீரர்கள் உள்பட அனைவரும் திறமையை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பாக இருக்கும் என்று கேப்டன் ஷிகர் தவான் கூறியுள்ளார்.

மும்பை, 

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதனால் ஷிகர் தவான் தலைமையில் 2-ம் தர இந்திய அணி உருவாக்கப்பட்டு இந்த அணி இலங்கையில் 3 சர்வதேச ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷன், பிரித்வி ஷா உள்ளிட்டோரும் இந்த அணியில் அங்கம் வகிக்கிறார்கள். இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 13-ந்தேதி கொழும்பில் நடக்கிறது.

இந்திய அணியினர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த தனிமைப்படுத்தும் நடைமுறை முடிந்து இந்திய வீரர்கள் இன்று இலங்கைக்கு புறப்படுகிறார்கள். ரவிசாஸ்திரி இங்கிலாந்தில் இருப்பதால் இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட உள்ளார்.

இலங்கை தொடரையொட்டி இருவரும் ஆன்லைன் வாயிலாக நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில், ‘இது மிகவும் சிறந்த அணி. எங்கள் அணிக்குள் நம்பிக்கையும், நேர்மறை எண்ணமும், சாதிக்கும் உத்வேகமும் இருக்கிறது. நன்றாக செயல்படுவோம் என்று ஒவ்வொருவரும் நம்புகிறார்கள். இது ஒரு புதிய சவால். அதே சமயம் களத்தில் எங்களது திறமையை வெளிப்படுத்த இது அருமையான வாய்ப்பு. 13-14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் கழிந்து விட்டது. எனவே எப்போது களம் இறங்கி அடித்து நொறுக்குவோம் என்று வீரர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இந்த தொடருக்கு தயாராக எங்களுக்கு 10-12 நாட்கள் இருக்கிறது.

இது அனுபவமும், இளமையும் கலந்த அணி. சாதுர்யமாக உழைத்து வரும் எங்களது வீரர்கள், போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்’ என்றார்.

பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், ‘தற்போதைய அணியில் உள்ள நிறைய வீரர்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிக்கும் முனைப்புடன் உள்ளனர். ஆனால் எங்களது பிரதான இலக்கு, இலங்கை தொடரை வெல்வது தான். அது குறித்து விவாதித்துள்ளோம். வாய்ப்பு பெறும் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி 20 ஓவர் போட்டிகள் இது தான்.

அணியில் அதிகமான இளம் வீரர்கள் உள்ளனர். ஒரு வேளை களம் இறங்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, தவான், புவனேஷ்வர்குமார், ஹர்திக் பாண்ட்யா போன்ற சீனியர் வீரர்களுடன் பழகுவதற்கு இளம் வீரர்களுக்கு இதை நல்லதொரு வாய்ப்பாக பார்க்கிறேன். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.

Next Story