2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இந்தியா-இங்கிலாந்து தொடரில் இருந்து தொடக்கம்


2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இந்தியா-இங்கிலாந்து தொடரில் இருந்து தொடக்கம்
x
தினத்தந்தி 30 Jun 2021 3:15 AM GMT (Updated: 2021-06-30T08:45:06+05:30)

2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இந்தியா-இங்கிலாந்து தொடரில் இருந்து தொடங்குகிறது.

லண்டன், 

சமீபத்தில் நிறைவடைந்த முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில் 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் விவரம் வெளியாகியுள்ளது. 2-வது சாம்பியன்ஷிப் 2021-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன. 

முந்தைய சீசனை போலவே ஒவ்வொரு அணியும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மொத்தம் 6 தொடர்களில் ஆட வேண்டும். இந்திய அணி உள்நாட்டில் நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராகவும், வெளிநாட்டில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளுக்கு எதிராகவும் ேமாதும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. இந்த சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி மொத்தம் 19 டெஸ்டுகளில் விளையாட உள்ளது. 

தற்போது இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆகஸ்டு 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்து 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆரம்பிக்கிறது. இங்கிலாந்து அணி இந்த காலக்கட்டத்தில் அதிகபட்சமாக 21 டெஸ்டுகளில் ஆட இருக்கிறது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 5 டெஸ்டுகளும் அடங்கும்.

கடந்த முறை ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்பட்டது. இந்த தடவை புள்ளி முறையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி டெஸ்ட் வெற்றிக்கு 12 புள்ளிகளும், டிராவுக்கு 4 புள்ளிகளும், ‘டை’க்கு 6 புள்ளிகளும் வழங்கப்படும். புள்ளிகள் எவ்வளவு குவித்தாலும் வெற்றி, சதவீதம் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படும். இறுதிப்போட்டி நடக்கும் இடம் உள்ளிட்ட விஷயங்களை ஐ.சி.சி. இன்னும் முடிவு செய்யவில்லை.

Next Story