இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி


இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி
x
தினத்தந்தி 1 July 2021 10:43 PM GMT (Updated: 1 July 2021 10:43 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி அடைந்தது.

டவுன்டான்,

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டவுன்டானில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 221 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 59 ரன்னும், ஷபாலி வர்மா 44 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கேதி கிராஸ் 5 விக்கெட்டும், சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சோபியா டுங்லி 73 ரன்னுடனும், கேத்தரின் புருன்ட் 33 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இருவரும் நிலைத்து நின்று ஆடி 6-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் திரட்டினார்கள். இந்திய அணி தரப்பில் பூனம் யாதவ் 2 விக்கெட்டும், ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, சினே ராணா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு வீராங்கனை கேதி கிராஸ் ஆட்டநாயகி விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அந்த அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வோர்செஸ்டரில் நாளை நடக்கிறது.

Next Story