கிரிக்கெட் சூதாட்டம்: ஐக்கிய அரபு அமீரக வீரர்கள் 2 பேருக்கு 8 ஆண்டுகள் தடை


கிரிக்கெட் சூதாட்டம்: ஐக்கிய அரபு அமீரக வீரர்கள் 2 பேருக்கு 8 ஆண்டுகள் தடை
x
தினத்தந்தி 2 July 2021 12:10 AM GMT (Updated: 2021-07-02T05:40:48+05:30)

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட ஐக்கிய அரபு அமீரக வீரர்கள் 2 பேருக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

துபாய்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் நடந்தது. இந்த போட்டிக்கான ஆட்ட முடிவுகளை நிர்ணயம் (மேட்ச் பிக்சிங்) செய்ய ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அமிர் ஹயாத், பேட்ஸ்மேன் ஆஷ்பாக் அகமது ஆகியோர் முயற்சி செய்ததாக புகார் கிளம்பியது. இந்திய சூதாட்ட தரகர் ஒருவரிடம் பணம் பெற்று கொண்டு அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அந்த 2 வீரர்களும் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

இந்த சம்பவம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு விரிவாக விசாரணை நடத்தியது. இதில் வீரர்களுக்கும், சூதாட்ட தரகருக்கும் இடையே வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்ததும், பரிசாக பணம் பெற்றதும் உறுதியானது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் பிறந்த ஐக்கிய அரபு வீரர்களான அமிர் ஹயாத், ஆஷ்பாக் அகமது ஆகியோருக்கு 8 ஆண்டுகள் தடை விதித்து ஐ.சி.சி. நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தடை காலம் 2 வீரர்களும் இடைநீக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

Next Story