இனவெறி சர்ச்சை:இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு 8 போட்டிகளில் விளையாட தடை


Image courtesy : Reuters
x
Image courtesy : Reuters
தினத்தந்தி 3 July 2021 12:42 PM GMT (Updated: 3 July 2021 12:42 PM GMT)

இனவெறி சர்ச்சை குறித்த விவகாரத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சனுக்கு 8 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன். இவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கினார். 7 விக்கெட்டுகள் வீழ்த்திய இவர், முதல் இன்னிங்சில் 42 ரன்கள் எடுத்தார். இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் 8 வருடங்களுக்கு முன் அவர் டுவிட்டரில் இனவெறி தொடர்பாக சர்ச்சைக்குரிய டுவீட்களை வெளியிட்டு இருந்தார். அந்த டுவீட்களுக்கு இப்போது பலர் கண்டனங்களை தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், தனது அப்போதைய டுவீட்களுக்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார். இருந்தும் அவர் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் அவருக்கு 8 போட்டிகளில்  விளையாட தடை விதித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் சுமார் ரூ.33  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த 8 போட்டிகள் தடையில், 5 போட்டிகளுக்கான தடையை அடுத்த 2 வருடங்களுக்கு விதிக்க முடியாது.

அவர் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடாதது, விடாலிடி பிளாஸ்ட் 20 ஓவர்கள் போட்டிகளை கணக்கில் எடுத்துக்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, உடனடியாக சர்வேதச போட்டிகளில் விளையாட அனுமதியளித்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுகிறார்.


Next Story