உள்ளூர் போட்டி அட்டவணை அறிவிப்பு: ரஞ்சி கிரிக்கெட் நவம்பர் 16-ந்தேதி தொடக்கம்


உள்ளூர் போட்டி அட்டவணை அறிவிப்பு: ரஞ்சி கிரிக்கெட் நவம்பர் 16-ந்தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 3 July 2021 11:12 PM GMT (Updated: 3 July 2021 11:12 PM GMT)

உள்நாட்டில் நடக்கக்கூடிய 2021-22-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

புதுடெல்லி, 

இந்தியாவில், முதல்தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 1934-35-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் முதல்முறையாக கடந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் உள்நாட்டில் நடக்கக்கூடிய 2021-22-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

இதில் கொரோனாவினால் கடந்த ஆண்டு தடைப்பட்ட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் நவம்பர் 16-ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கிரிக்கெட்டில் மொத்தம் 177 ஆட்டங்கள் நடக்க உள்ளது. இதே போல் மாநில அணிகளுக்கு இடையிலான சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 20-ந்தேதி தொடங்கி நவம்பர் 12-ந்தேதி வரையும், விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ந்தேதி முதல் மார்ச் 26-ந்தேதி வரையும் நடைபெறுகிறது.

சீனியர் பெண்கள் கிரிக்கெட் லீக் செப்டம்பர் 21-ந்தேதி முதல் அக்டோபர் 22-ந்தேதி வரையும், பெண்களுக்கான சேலஞ்சர் கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 27-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையும் நடக்கிறது. இது தவிர பல்வேறு வயது பிரிவு போட்டிகளும் நடத்தப்படுகிறது. இந்த சீசனில் மொத்தம் 2,127 ஆட்டங்கள் நடக்க உள்ளது. ‘உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை முழு பாதுகாப்புடன் நடத்தி முடிப்போம் என்று நம்புகிறோம். இதில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு எல்லாவற்றையும் விட முக்கியமானது’ என்று இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story