ஜிம்பாவே அணிக்கெதிரான டெஸ்ட்: 220 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி


ஜிம்பாவே அணிக்கெதிரான டெஸ்ட்: 220 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 12 July 2021 1:05 AM GMT (Updated: 12 July 2021 1:05 AM GMT)

ஜிம்பாவே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், 220 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றிபெற்றது.

ஹராரே, 

ஹராரேவில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் 192 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் ஒரு விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வங்காளதேசம் அணியின் சார்பில் ஷத்மான் இஸ்லாம் (115 ரன்), நஜ்முல் ஹூசைன் ஷான்டோ (117 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர். 

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 477 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 4-ம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரண்டென் டெய்லர் 92 ரன்கள் எடுத்தார். 

இந்நிலையில், கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. வங்கதேச அணியை விட 337 ரன்கள் பின்தங்கிய நிலையில், ஜிம்பாவே அணியின் சார்பில் களமிறங்கிய டொனால்டு டிரிபனோ மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார், கடைசி கட்டத்தில் முசாராபானி 30 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில், ஜிம்பாப்வே அணி 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஜிம்பாவேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் சார்பில் மெஹதி ஹசன், தஸ்கின் அகமது ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். ஆட்ட நாயகன் விருது மக்முதுல்லாவுக்கு வழங்கப்பட்டது.

Next Story