ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் கெய்ல் சிக்சர் மழை


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் கெய்ல் சிக்சர் மழை
x
தினத்தந்தி 14 July 2021 4:40 AM GMT (Updated: 14 July 2021 4:40 AM GMT)

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது.

செயின்ட் லூசியா, 

ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக மோசஸ் ஹென்ரிக்ஸ் 33 ரன்களும், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 30 ரன்களும் எடுத்தனர். சிக்கனமாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் ஹைடன் வால்ஷ் 4 ஓவர்களில் 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 14.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முந்தைய ஆட்டங்களில் தடுமாறிய கிறிஸ் கெய்ல் சிக்சர் மழை பொழிந்தார். 67 ரன்கள் (38 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி பழைய நிலைக்கு திரும்பிய அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். 20 ஓவர் கிரிக்கெட்டில் கெய்ல் 2016-ம் ஆண்டுக்கு பிறகு அடித்த முதல் அரைசதம் இதுவாகும்.

ஏற்கனவே முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்த வெஸ்ட் இ்ண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆட்டங்களில் வெற்றி கண்டு தொடரை வெல்வது 1995-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

41 வயதான கெய்ல் கூறுகையில், ‘கணிசமாக ரன் எடுத்ததுடன், தொடரையும் வசப்படுத்தியது மிகவும் திருப்தி அளிக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக கேப்டன் பொல்லார்ட் என்னிடம் பேசி உற்சாகப்படுத்தினார். அவருக்கு நன்றிகடன் பட்டுள்ளேன். இந்த அரைசதத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்கு குறிப்பாக பொல்லார்ட்டுக்கு சமர்பிக்கிறேன். உலக கோப்பை போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது இலக்கு’ என்றார். ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை (431 ஆட்டம்) கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் கெய்ல் படைத்தார். வேறு எந்த வீரரும் 11 ஆயிரம் ரன்களை கூட தொட்டதில்லை.

இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.

Next Story