பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ‘திரில்’ வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ‘திரில்’ வெற்றி
x
தினத்தந்தி 14 July 2021 8:02 PM GMT (Updated: 14 July 2021 8:02 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 332 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து ‘திரில்’ வெற்றி பெற்றது.

பர்மிங்காம்,

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்தது. தனது 14-வது சதத்தை பூர்த்தி செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 158 ரன்கள் (139 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். இங்கிலாந்துக்கு எதிராக 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் கேப்டன் என்ற சிறப்பை பெற்றதோடு, 14 சதங்களை அதிவேகமாக எட்டியவர் (81 இன்னிங்ஸ்) என்ற சாதனையையும் பாபர் அசாம் படைத்தார். இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவின் அம்லா தனது 84-வது இன்னிங்சில் 14 சதங்கள் அடித்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

அடுத்து மெகா இலக்கை நோக்கி அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணியில் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 165 ரன்களுடன் (23.3 ஓவர்) தடுமாறியது.

இதன் பின்னர் 6-வது விக்கெட்டுக்கு ஜேம்ஸ் வின்சும், லிவிஸ் கிரிகோரியும் இணைந்து அணியை காப்பாற்றினர். தனது முதலாவது சதத்தை எட்டிய ஜேம்ஸ் வின்ஸ் 102 ரன்களும் (95 பந்து, 11 பவுண்டரி), கிரிகோரி 77 ரன்களும் (69 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

இங்கிலாந்து அணி 48 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. கொரோனா பிரச்சினையால் இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 2-ம் தர அணி களம் புகுந்து அசத்தியுள்ளது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த வழக்கமான கேப்டன் இயான் மோர்கன், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், ஜாசன் ராய் உள்ளிட்டோர் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட லிவிஸ் கிரிகோரி, ஜாக் பால், சகிப் மமூத் ஆகியோருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பென் ஸ்டோக்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

Next Story