டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
x

சேலம் அணிக்கு டி.என்.பி.எல். கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சோனு யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டும், ஹரிஷ் குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதையடுத்து 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் கவுசிக் காந்தி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் நிதானமாக ஆடி அரை சதத்தைக் கடந்தார்.

மறுமுனையில் சுஜய் (10), ராதாகிருஷ்ணன் (0), ராஜகோபால் சதீஷ் (1) ஆகிய விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ஜெகதீசன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு வந்த உதிரசாமி சசிதேவ், ஹரிஷ் குமார் இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

சசிதேவ் 30 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதே சமயம் ஹரிஷ் குமார் 14 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இறுதியில் 18.5 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

Next Story