இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தது


இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் மழையால்  டிராவில் முடிந்தது
x
தினத்தந்தி 8 Aug 2021 5:06 PM GMT (Updated: 8 Aug 2021 5:06 PM GMT)

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் மழையால் ரத்து செய்யப்பட்டதையடுத்து டிராவில் முடிந்தது.

நாட்டிங்காம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட்  போட்டி நாட்டிங்காமில் நடந்தது . இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 183 ரன்களும், இந்தியா 278 ரன்களும் எடுத்தன. 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது நாள் போட்டி நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 85.5 ஓவர்களில் 303 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. சதம் விளாசி அணியை சரிவில் இருந்து காப்பாற்றிய கேப்டன் ஜோ ரூட் 109 ரன்களில் (172 பந்து, 14 பவுண்டரி) கேட்ச் ஆனார். அவர் அடித்த 21-வது சதம் இதுவாகும். இந்தியாவுக்கு எதிராக 6-வது சதமாகும். சாம் கர்ரன் 32 ரன்களும், பேர்ஸ்டோ 30 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இதன் மூலம் இந்திய அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்தது. ரோகித் மற்றும் புஜாரா இருவரும் தலா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில், 5-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. உணவு இடைவேளை முடிந்தும், தேநீர் இடைவேளை முடிந்தும் மழை ஓய்ந்தபாடில்லை. இதனால், போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன்மூலம், முதல் டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.

கடைசி நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் மீதமிருக்க 157 ரன்களே தேவை என்பதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பே அதிகமாக இருந்தது. ஆனால், மழையின் குறிக்கீடு இந்தியாவின் வெற்றியை தகர்த்துள்ளது.

Next Story