வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 62 ரன்னில் சுருண்டு படுதோல்வி


வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 62 ரன்னில் சுருண்டு படுதோல்வி
x
தினத்தந்தி 10 Aug 2021 1:55 AM GMT (Updated: 10 Aug 2021 1:55 AM GMT)

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

டாக்கா, 

ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 8 விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முகமது நைம் 23 ரன்களும், கேப்டன் மக்முதுல்லா 19 ரன்களும் எடுத்தனர். ‘எக்ஸ்டிரா’ வகையில் அந்த அணிக்கு 11 வைடு உள்பட 18 ரன்கள் கிடைத்தது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி இந்த எளிய இலக்கை கூட நெருங்க முடியாமல் 13.4 ஓவர்களில் வெறும் 62 ரன்னில் சரண் அடைந்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 79 ரன்னில் சுருண்டதே மோசமான ஸ்கோராக இருந்தது. பொறுப்பு கேப்டன் மேத்யூ வேட் (22 ரன்), பென் மெக்டெர்மோட் (17 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. 

இதன் மூலம் வங்காளதேசம் 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல்-ஹசன் 3.4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். முகமது சாய்புத்தின் 3 விக்கெட்டுகளும், நசும் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆயிரத்திற்கு மேல் (1,718 )ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் (84 ஆட்டத்தில் 102 விக்கெட்) வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ள வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை வங்காளதேசம் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த அணி தொடர் ஒன்றை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

Next Story