டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி அணிகள் இன்று பலப்பரீட்சை


டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 10 Aug 2021 2:12 AM GMT (Updated: 2021-08-10T07:42:54+05:30)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

சென்னை,

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் திருச்சி வாரியர்ஸ் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 9 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், கோவை கிங்ஸ் 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 7 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் சமபுள்ளிகள் பெற்றாலும், ரன்ரேட் அடிப்படையில் கோவை கிங்ஸ் அணி ‘பிளே-ஆப்’அதிர்ஷ்டத்தை தட்டிச் சென்றது. நெல்லை அணி வெளியேறியது. மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் 2 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை ஆகியவற்றுடன் தலா 5 புள்ளிகள் பெற்று முறையே 6-வது, 7-வது, 8-வது இடங்களை பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது. இதில் 2 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேறாது. அந்த அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு. அதாவது நாளை நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் மோதும் திண்டுக்கல் டிராகன்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் வெற்றி காணும் அணியை இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சந்திக்கும்.

2017, 2019-ம் ஆண்டு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு பேட்டிங்கில் என். ஜெகதீசன் (211 ரன்கள்), கேப்டன் கவுசிக் காந்தி, சசிதேவ், ஆல்-ரவுண்டர் ஆர்.சதீஷ் ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளித்து நம்பிக்கையூட்டுகின்றனர். பவுலிங்கில் சாய் கிஷோர், எம்.சித்தார்த், ஆர்.சதீஷ், சோனு யாதவ், ஹரிஷ்குமார் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து இருக்கும் திருச்சி வாரியர்ஸ் அணியில் நிதிஷ் ராஜ கோபால் (225 ரன்கள்), ஆதித்யா கணேஷ், அமித் சாத்விக், அந்தோணிதாஸ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் சரவணகுமார், மதிவாணன், பொய்யாமொழி, கேப்டன் ரஹில் ஷா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

கடைசி லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி இருந்ததால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் முனைப்புடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வரிந்துகட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

திருச்சி வாரியர்ஸ்: சந்தோஷ் ஷிவ், அமித் சாத்விக், நிதிஷ் ராஜகோபால், முகமது அத்னன்கான், ஆதித்யா கணேஷ், அந்தோணி தாஸ், ரஹில் ஷா (கேப்டன்), சரவணகுமார், எம்.மதிவாணன், பொய்யாமொழி, ஆகாஷ் சும்ரா.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி (கேப்டன்), என்.ஜெகதீசன், ஜெகநாத் சீனிவாஸ் அல்லது ராதாகிருஷ்ணன், எஸ்.சுஜய், சாய் கிஷோர், ஆர்.சதீஷ், சசிதேவ், ஹரிஷ் குமார், சோனு யாதவ், எம்.சித்தார்த், அலெக்சாண்டர்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 

Next Story