20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு - ராஸ் டெய்லர் நீக்கம்


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு - ராஸ் டெய்லர் நீக்கம்
x
தினத்தந்தி 11 Aug 2021 6:09 AM GMT (Updated: 2021-08-11T11:39:49+05:30)

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஸ் டெய்லர் நீக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்ட்சர்ச்,

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது.

20 ஓவர் உலக கோப்பை மற்றும் அதனை தொடர்ந்து இந்திய சுற்றுப்பயணத்தில் நடைபெறும் மூன்று 20 ஓவர் போட்டிக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹாங்காங்கில் இருந்து நியூசிலாந்தில் குடியேறி இருக்கும் ஆல்-ரவுண்டர் மார்க் சாப்மேன் அணிக்கு தேர்வாகியுள்ளார்.

102 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான 37 வயது ராஸ் டெய்லர், காலின் டி கிரான்ட்ஹோம், பின் ஆலென் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அமீரக ஆடுகளம் சுழலுக்கு அனுகூலமாக இருக்கும் என்பதால் டாட் ஆஸ்டில், சோதி, மிட்செல் சான்ட்னெர் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

உலக கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணி வருமாறு:-

டிவான் கான்வே, மார்ட்டின் கப்தில், கேன் வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், டிம் செய்பெர்ட், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், சான்ட்னெர், டாட் ஆஸ்டில், சோதி, கைல் ஜாமிசன், டிரென்ட் பவுல்ட், லோக்கி பெர்குசன், டிம் சவுதி.

உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுகிறது. அடுத்து பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டு செப்டம்பர் 17-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது.

இந்த இரண்டு போட்டி தொடரிலும் டாம் லாதம் தலைமையிலான இரண்டாம் தர நியூசிலாந்து அணி கலந்து கொள்கிறது. அந்த அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் (ஐதராபாத் சன் ரைசர்ஸ்), வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட் (மும்பை இந்தியன்ஸ்), கைல் ஜாமிசன் (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்), லோக்கி பெர்குசன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் இடம் பெறவில்லை. அதே காலக்கட்டத்தில் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்பதற்கு வசதியாக நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் இந்த தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் பங்கேற்பதில் நிலவிய சிக்கல் தீர்ந்தது.

Next Story