இந்தியா-இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் - லண்டனில் இன்று தொடங்குகிறது


இந்தியா-இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் - லண்டனில் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 12 Aug 2021 4:54 AM GMT (Updated: 12 Aug 2021 4:54 AM GMT)

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.

லண்டன்,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனாலும், 2-வது இன்னிங்சில் 303 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸ் பின்னடைவை சமாளித்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் முறையே 64, 109 ரன்கள் எடுத்து அணியின் முதுகெலும்பாக விளங்கினார்.

முதல் இன்னிங்சில் 278 ரன்களை சேர்த்து 95 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடி 4-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. இறுதி நாளில் இந்தியா மேலும் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று இருந்த நிலையில் மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இரு அணியிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டும் வகையில் பந்து வீசினார்கள். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை பொறுத்தமட்டில் குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தி மீண்டும் விசுவரூபம் எடுத்தார்.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

முதலாவது டெஸ்டில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (84, 26 ரன்கள்) தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார். ஆனால் புஜாரா 4 ரன்னிலும், கேப்டன் விராட்கோலி ரன் எதுவும் எடுக்காமலும், ரஹானே 5 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். சர்வதேச போட்டிகளில் கடந்த 2 ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருந்து வரும் கேப்டன் விராட்கோலி பேட்டில் இருந்து கணிசமான ரன் வருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள். அதுபோல் புஜாரா, ரஹானே ஆகியோரும் அரைசதத்தை எட்டி அதிக நாளாகின்றன. அதேநேரத்தில் கடைசி கட்ட வீரர்கள் பேட்டிங்கில் பயனுள்ள பங்களிப்பை அளித்து அணியின் முன்னிலைக்கு வழிவகுத்து மகிழ்ச்சி அளித்தனர்.

கடந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வினை சேர்க்காதது சலசலப்பை ஏற்படுத்தினாலும், எஞ்சிய ஆட்டங்களில் 4 வேகம், ஒரு சுழல் என்ற பார்முலா தொடரும் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்து இருந்தார். அத்துடன் ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். 

கடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் தசைப்பிடிப்பு காயத்தில் சிக்கி இருப்பதால் அவர் இந்த ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா ஆகியோரில் ஒருவருக்கு இடம் அளிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ரேசில் பேட்டிங்கில் கைகொடுக்கக்கூடிய அஸ்வின் முன்னிலை வகிக்கிறார்.

இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் பேட்டிங்கில் தொய்வை சந்தித்தது. கேப்டன் ஜோரூட் தவிர மற்றவர்கள் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் உள்ளூரில் நடந்து வரும் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மொயீன் அலி அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு அவர் மீண்டும் திரும்பி இருக்கிறார். ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இல்லாத குறையை போக்கும் வகையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

ஜாக் கிராவ்லிக்கு பதிலாக ஹசீப் ஹமீது இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சியின் போது காலில் காயம் அடைந்த சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு தசைநார் கிழிவு ஏற்பட்டு இருப்பது ‘ஸ்கேன்’ பரிசோதனையில் தெரியவந்து இருப்பதால் அவர் எஞ்சிய தொடரில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வலி காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. எனவே அவர் இந்த டெஸ்டில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அவர் விளையாட முடியாமல் போனால் அது இங்கிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவாகும். ஸ்டூவர்ட் பிராட்டுக்கு பதிலாக மார்க்வுட் இடம் பெறுவார். மேலும் கடைசி நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் சாகிப் மக்மூத் அணிக்கு அவசரமாக அழைக்கப்பட்டு இருக்கிறார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நிறைய புற்கள் இருப்பதால் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்து வானிலையை கணிப்பது கடினம். திடீரென சீதோஷ்ண நிலை மாறி மேகம் திரண்டு விடும். இவ்வாறான சூழலில் பந்து நன்கு ஸ்விங் ஆகி பேட்ஸ்மேன்களை மிரள வைத்து விடும். இந்த டெஸ்டில் 4-வது நாளில் மட்டும் மழையால் ஆட்டம் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவது டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டதால் அந்த உத்வேகத்துடன் இந்திய அணி களம் காணும். அதேநேரத்தில் முந்தைய தவறுகளை களைந்து உள்ளூர் அனுகூலத்தை பயன்படுத்தி நல்ல நிலைக்கு திரும்ப இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட்கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின் அல்லது இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜாக் கிராவ்லி அல்லது ஹசீப் ஹமீது, ஜோ ரூட் (கேப்டன்), பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் கர்ரன், ஆலி ராபின்சன், மார்க் வுட், கிரேக் ஒவெர்டன் அல்லது சாகிப் மக்மூத்.

இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3,4 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story