இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் இன்று மோதல்


இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் இன்று மோதல்
x
தினத்தந்தி 13 Aug 2021 3:26 AM GMT (Updated: 2021-08-13T08:56:38+05:30)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை முடிவு செய்யும் தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

சென்னை,

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் முதல்அணியாக, திருச்சி வாரியர்ஸ் இறுதிப்போட்டியை எட்டிவிட்டது. மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் கவுசிக் காந்தி தலைமையிலான நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹரிநிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை இன்றிரவு (வெள்ளிக்கிழமை) எதிர்கொள்கிறது.

லீக் சுற்று முடிவில் 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலாவது தகுதி சுற்றில் 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியிடம் போராடி தோல்வியை தழுவியது. அந்த ஆட்டத்தில் கேப்டன் கவுசிக் காந்தி, விக்கெட் கீப்பர் ஜெகதீசன் இருவரும் 4-வது ஓவருக்குள் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இளம் வீரர் ராதாகிருஷ்ணன் 82 ரன்கள் சேர்த்து 150 ரன்களை கடக்க வைத்தார். இருப்பினும் இந்த ஸ்கோர் திருச்சியை மடக்குவதற்கு போதுமானதாக இல்லை.

இறுதிசுற்றுக்கு தகுதி பெற மற்றொரு வாய்ப்பு பெற்றுள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முந்தைய தவறுகளை சரி செய்து முழு திறமையை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. மிடில் வரிசையில் ராதாகிருஷ்ணன், சசிதேவ், ஆல்-ரவுண்டர்கள் சதீஷ், ஹரிஷ்குமார் ஆகியோர் நம்பிக்கை தந்தாலும், தொடக்க ஜோடி கவுசிக் காந்தி, ஜெகதீசன் இருவரும் அபாரமான தொடக்கம் அமைப்பது அவசியம். அப்போது தான் பெரிய ஸ்கோர் குவிக்க முடியும். இதே போல் சாய் கிஷோர், சித்தார்த் சுழலில் மிரட்ட வேண்டியது முக்கியம். ஏற்கனவே லீக் சுற்றில் திண்டுக்கல் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பதால் கில்லீஸ் கூடுதல் உத்வேகத்துடன் களம் காணும்.

புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த திண்டுக்கல் அணி வெளியேற்றுதல் சுற்றில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சை விரட்டியது. அதில் ஹரிநிஷாந்த், ஆர்.விவேக் இருவரும் அரைசதம் அடித்தனர். ஹரிநிஷாந்த் ( 8 ஆட்டத்தில் ஆடி 19 சிக்சருடன் 312 ரன்), விவேக் (3 அரைசதத்துடன் 233 ரன்), மணி பாரதி (187 ரன்) ஆகியோர் அந்த அணியில் நல்ல பார்மில் உள்ளனர். லீக்கில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஆயத்தமாகிறார்கள்.

இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் இருப்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story