ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க அனுமதி


ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க அனுமதி
x
தினத்தந்தி 16 Aug 2021 1:38 AM GMT (Updated: 2021-08-16T07:08:18+05:30)

ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க அனுமதி.

சிட்னி,

கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள் கலந்து கொள்வதில் சந்தேகம் நிலவியது. ஏனெனில் ஐ.பி.எல். போட்டி சமயத்தில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவில் வைத்து விளையாட திட்டமிட்டிருந்தது. இந்தியாவில் நடத்த இயலவில்லை என்றால் மாற்று இடமாக இலங்கை தேர்வு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை தள்ளிவைப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் சிறந்த முறையில் தயாராகுவதற்கு அதற்கு முன்பாக நடக்க உள்ள ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்பதே சரியாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்களை ஐ.பி.எல். போட்டியில் அனுமதிக்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ், ஹேசில்வுட், கேன் ரிச்சர்ட்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்பதில் எழுந்த சிக்கல் முழுமையாக தீர்ந்தது.

Next Story