ஷமி, பும்ராவின் பேட்டிங்கால் எழுச்சி: இங்கிலாந்தை பந்தாடியது, லண்டன் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி


ஷமி, பும்ராவின் பேட்டிங்கால் எழுச்சி:  இங்கிலாந்தை பந்தாடியது, லண்டன் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி
x
தினத்தந்தி 17 Aug 2021 2:53 AM GMT (Updated: 2021-08-17T08:23:16+05:30)

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 364 ரன்களும், இங்கிலாந்து 391 ரன்களும் குவித்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 4-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 14 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று அரங்கேறியது. தொடர்ந்து பேட்டிங் செய்த ரிஷாப் பண்ட் 22 ரன்னில் வேகப்பந்து வீச்சாளர் ராபின்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆனார். இஷாந்த் ஷர்மாவும் (16 ரன்) அவரது பந்து வீச்சுக்கே வீழ்ந்தார். அப்போது இந்தியா 8 விக்கெட்டுக்கு 209 ரன்களுடன் சிக்கலில் தவித்தது. இங்கிலாந்தின் கை சற்று ஓங்கியது போல் தெரிந்தது.

பேட்டிங்கில் கலக்கிய ஷமி-பும்ரா கூட்டணி

இந்த சூழலில் 9-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த முகமது ஷமியும், ஜஸ்பிரித் பும்ராவும் இங்கிலாந்தின் உற்சாகத்தை சீர்குலைத்தனர். இருவரும் கைதேர்ந்த பேட்ஸ்மேன்கள் போன்று விளையாடி வியக்க வைத்தனர்.

பும்ராவுக்கு, தொடக்கத்தில் அடுக்கடுக்கான பவுன்சர் பந்துகளை வீசி இங்கிலாந்த பவுலர்கள் குடைச்சல் கொடுத்தனர். இதில் மார்க்வுட் வீசிய ஒரு பந்து அவரது ஹெல்மெட்டை பயங்கரமாக தாக்கியது. உடனடியாக அணியின் பிசியோதெரபிஸ்ட் வந்து அவரை சோதித்து பார்த்தார். காயம் எதுவும் இல்லை என்று கூறியதையடுத்து தொடர்ந்து பேட்டிங் செய்தார். இன்னொரு முறை ஆண்டர்சன் வீசிய பந்தும் அவரது ஹெல்மெட்டை பதம் பார்த்தது. மறுமுனையில் முகமது ஷமி, சிரமமின்றி இங்கிலாந்தின் பந்து வீச்சை வறுத்தெடுத்தார். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்து ஒரு கட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் நொந்தே போனார்கள். ஷமி தனது 2-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

இந்திய அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டெடுத்து புத்துயிர்ஊட்டி வலுவான நிலைக்கு எழுச்சி பெற வைத்த இந்த ஜோடியை இங்கிலாந்து பவுலர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றிய இவர்கள் 20 ஓவர்கள் திறம்பட சமாளித்தனர்.

272 ரன் இலக்கு

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி 2-வது இன்னிங்சில் 109.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. முகமது ஷமி 56 ரன்களுடனும் (70 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஜஸ்பிரித் பும்ரா 34 ரன்களுடனும் (64 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டிரா செய்வதற்கு குறைந்தது 60 ஓவர்கள் தாக்குப்பிடித்தாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் (0), டாம் சிப்லி (0) இருவரும் இந்திய வேக தாக்குதலில் டக்-அவுட் ஆனார்கள். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஒன்றில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருவரும் ரன் இன்றி சரண் அடைந்தது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து 4 ரன்னில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த ஹசீப் ஹமீத் 9 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோ 2 ரன்னிலும் வெளியேற்றப்பட்டார்.

முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அபாயகரமான பேட்ஸ்மேன் கேப்டன் ஜோ ரூட்டை (33 ரன், 60 பந்து, 5 பவுண்டரி) இந்த முறை பும்ரா வேட்டையாடினார். அவரது பந்து வீச்சில் ஜோ ரூட் ஸ்லிப்பில் கோலிடம் பிடிபட்டார். இதனால் இந்தியாவின் பிடி மேலும் இறுகியது.

தாமதப்படுத்திய பட்லர்

விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் வந்த வேகத்தில் வெளியேறி இருக்க வேண்டியது. 2 ரன்னில் இருந்த போது அவர் கொடுத்த மிக எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற கோலி வீணடித்து விட்டார். அதன் பிறகு அவர் தான் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக மாறினார். அவர் ஒரு பக்கம் போராட மறுமுனையில் மொயீன் அலி 13 ரன்னிலும், சாம் கார்ரன் ரன்இன்றியும் நடையை கட்டினார்.

அந்த சமயம் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 90 ரன்களுடன் ஊசலாடியது. இதன் பின்னர் ஜோஸ் பட்லர்-ராபின்சன் ஜோடி சேர்ந்து 12 ஓவர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு கொஞ்சம் அழுத்தம் கொடுத்தனர்.

இவர்கள் பிரிந்ததும் ஆட்டம் இந்தியா வசம் ஆனது. ராபின்சன் 9 ரன்னில் (35 பந்து) பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. டி.ஆர்.எஸ்.-ன்படி கோலி அப்பீல் செய்தே சாதகமான முடிவை பெற்றார். தொடர்ந்து ஜோஸ்பட்லர் 25 ரன்களிலும் (96 பந்து, 3 பவுண்டரி), ஆண்டர்சன் ரன்இன்றியும் முகமது சிராஜியின் பந்துவீச்சுக்கு இரையானார்கள்.

இந்தியா வெற்றி

முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 51.5 ஓவர்களில் 120 ரன்னில் சுருண்டது. இன்னும் அரைமணி நேரம் தாக்குப்பிடித்து இருந்தால் ஆட்டம் டிராவில் முடிந்திருக்கும். அதற்குள் இங்கிலாந்தின் கதையை நமது பவுலர்கள் முடித்துவிட்டனர்.

இதன் மூலம் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், ஷமி ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் வருகிற 25-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.

Next Story