லண்டன் டெஸ்டில் அபார வெற்றி: இங்கிலாந்து வீரர்களின் சீண்டல்கள் கூடுதல் உத்வேகம் தந்தது இந்திய கேப்டன் கோலி பேட்டி


லண்டன் டெஸ்டில் அபார வெற்றி: இங்கிலாந்து வீரர்களின் சீண்டல்கள் கூடுதல் உத்வேகம் தந்தது இந்திய கேப்டன் கோலி பேட்டி
x
தினத்தந்தி 18 Aug 2021 2:23 AM GMT (Updated: 2021-08-18T07:53:08+05:30)

லண்டன் டெஸ்டில் இங்கிலாந்து வீரர்களின் சீண்டல்கள் எங்களின் வெற்றி வேட்கைக்கு கூடுதல் உத்வேகத்தை தந்தது என்று இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார்.

லண்டன்,

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் கடைசி நாளான நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 60 ஓவர்களில் 272 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்துக்கு இந்தியா இலக்கு நிர்ணயித்தது. டிரா செய்யும் முனைப்புடன் தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இங்கிலாந்தை இந்திய வேகசூறாவளிகள் 51.5 ஓவர்களில் 120 ரன்களில் சுருட்டி அசத்தினர். வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

இந்திய அணி குறித்து சூப்பர் பெருமை அடைகிறேன். நாங்கள் வகுத்துள்ள திட்டங்கள் அனைத்தையும் சரியாக செயல்படுத்தினோம். 60 ஓவருக்குள் இங்கிலாந்தை ஆல்-அவுட் ஆக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. 2-வது இன்னிங்சின் போது இங்கிலாந்து வீரர்கள் அடிக்கடி எங்களை சீண்டும் வகையில் செயல்பட்டனர். இதனால் களத்தில் கொஞ்சம் பதற்றம் நிலவியது. சொல்லப்போனால் இது தான் எங்களுக்கு உதவிகரமாக இருந்தது. இதன் மூலம் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்குரிய கூடுதல் உத்வேகத்தை அடைந்தோம்.

ஷமி-பும்ராவுக்கு பாராட்டு

2-வது இன்னிங்சில் முகமது ஷமி (56 ரன்), பும்ராவின் (34ரன்) பேட்டிங் பிரமாதம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாங்கள் வெற்றி பெற்றுள்ள டெஸ்ட் போட்டிகளை எடுத்துக் கொண்டால், அதில் பின்வரிசை ஆட்டக்காரர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். எங்களது பேட்டிங் பயிற்சியாளர் அவர்களுடன் இணைந்து கடினமாக உழைக்கிறார். அதைவிட முக்கியமாக பேட்டிங் செய்ய இறங்கும் போது நம்மால் நிலைத்து நின்று ஓரளவு ரன் சேர்க்க முடியும் என்று அவர்கள் நம்ப வேண்டும். முன்பு இத்தகைய நம்பிக்கை கிடையாது. ஆனால் இப்போது பேட்டிங் பயிற்சியால் நம்பிக்கையும், ரன் எடுக்கும் ஆர்வமும் அவர்களிடம் காணப்படுகிறது. அவர்கள் கடினமான சூழலில் திரட்டிய இந்த ரன்கள் விலைமதிப்பற்றது. மிகவும் பாராட்டுக்குரியவர்கள் . அதனால் தான் பும்ராவும், ஷமியும் பெவிலியன் திரும்பிய போது அவர்களை கவுரவிக்கும் விதமாக அனைவரும் வரிசையாக எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினோம்.

கடைசியாக 2014-ம் ஆண்டு டோனி தலைமையில் லண்டன் லார்ட்சில் டெஸ்டில் வெற்றி பெற்றிருந்தோம். அந்த அணியில் நானும் அங்கம் வகித்தேன். அது சிறப்பு மிக்க ஒரு வெற்றி. அதில் 2-வது இன்னிங்சில் இஷாந்த் ஷர்மா மிரட்டலாக (7 விக்கெட்) பந்து வீசினார். அந்த டெஸ்டை பொறுத்தவரை 4-வது நாளில் இருந்தே இங்கிலாந்தை நெருக்கடிக்குள்ளாக்கினோம்.

ஆனால் இந்த டெஸ்டில் கடைசி நாளில் அதுவும் 60 ஓவர்களுக்குள் முடிவு பெற்றிருப்பது இன்னும் தனித்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக முகமது சிராஜ் போன்ற பவுலர்கள் முதல்முறையாக லார்ட்சில் களம் இறங்கி பந்துவீசிய விதம் அற்புதம். நான் ஏற்கனவே சொன்னது மாதிரி களத்தில் நடந்த சில சம்பவங்கள் (இங்கிலாந்து வீரர்களுடன் வாக்குவாதம்) உண்மையிலேயே எங்களுக்கு துடிப்பையும், சாதிக்க தூண்டுவதற்குரிய கூடுதல் உத்வேகத்தையும் தந்தது.

சுதந்திர தின பரிசு

சுதந்திர தின விழா முடிந்த அடுத்த நாளில் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இருப்பினும் இதனை நாட்டு மக்களுக்கு சுதந்திர தின பரிசாக அளிக்க விரும்புகிறோம். இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. இந்த வெற்றியின் மிதப்பிலேயே இருந்து விடக்கூடாது. அடுத்து வரும் போட்டிகளிலும் இதே போன்று விளையாட வேண்டும்.

இவ்வாறு கோலி கூறினார்.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 25-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.

Next Story