20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் மோதல்; பாகிஸ்தானை விட இந்திய அணியே வலுவானது - கம்பீர்


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் மோதல்; பாகிஸ்தானை விட இந்திய அணியே வலுவானது - கம்பீர்
x
தினத்தந்தி 20 Aug 2021 5:30 AM GMT (Updated: 20 Aug 2021 5:30 AM GMT)

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை விட இந்திய அணியே வலுவானது என்று இந்திய முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.

கம்பீர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் லீக்கில் (அக்டோபர் 24-ந்தேதி துபாயில்) மோத உள்ளன. பாகிஸ்தானுக்கு இந்த முறையும் கடும் நெருக்கடி ஏற்படும். ஏனெனில் உலக கோப்பை போட்டிகளில் (50 ஓவர் மற்றும் 20 ஓவர்) இந்திய அணி, பாகிஸ்தானை 5 முறை தோற்கடித்து இருக்கிறது. ஒரு முறை கூட உலககோப்பை போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை. இந்தியாவுக்கு தான் நெருக்கடி என்று நாம் பேசக்கூடாது. மாறாக பாகிஸ்தானுக்கு தான் நெருக்கடி அதிகமாக இருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்போதைக்கு ஒப்பிட்டு பார்த்தால் பலத்தில் பாகிஸ்தானை விட இந்திய அணியே பல அடி மேலோங்கி நிற்கிறது. ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை எந்த அணியாலும், யாரையும் வீழ்த்த முடியும். ஏனெனில் இது தனிநபர் சார்ந்த போட்டி. யாராவது ஒருவர் நிலைத்து நின்று ஆடினாலும் ஆட்டத்தின் போக்கு மாறி விடும். எனவே எந்த அணியையும் நாம் குறைவாக எடுத்துக் கொள்ள முடியாது. உதாரணமாக ஆப்கானிஸ்தானை நீங்கள் எந்த வகையிலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்த அணியில் இடம் வகிக்கும் சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான், முகமது நபி, முஜீப் ரகுமான் போன்ற வீரர்களால் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்க முடியும். இதே போன்று தான் பாகிஸ்தான் அணியும். ஆனால் பாகிஸ்தானுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும்.

கணிக்க முடியாத அணி
என்னை பொறுத்தவரை இந்த உலக கோப்பையில் குரூப்1 தான், பலம் வாய்ந்த அணிகள் மோதக்கூடிய ‘குரூப் ஆப் டெத்’ ஆகும். உண்மையில் இந்த பிரிவில் தான் ஆட்டங்கள் கடும் சவாலாக இருக்கும். சூப்பர்12 சுற்றின் முதல் நாளில் குரூப்1-ல் இடம் பெற்றுள்ள (அக்டோபர் 23-ந்தேதி ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ்) அணிகள் மோத உள்ளன. எனவே அன்றைய சனிக்கிழமை பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த நாளாக அமையப்போகிறது.

அதிரடி வீரர்கள் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் எப்போதுமே எளிதில் கணிக்க முடியாத ஒரு அணியாகும். அவர்களால் 3-வது முறையாக இந்த உலக கோப்பையை வெல்ல முடியும். இதே போல் இங்கிலாந்து அணியிலும் அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை வென்றதில் இருந்து, அனேகமாக வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து மிகச்சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு அணியாக திகழ்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு, தங்களுக்குரிய நாளாக அமைந்து விட்டால் அபாயகரமான அணியாக உருவெடுத்து விடும்.

இவ்வாறு கம்பீர் கூறினார்.

Next Story