இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராட்டம்


இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2021 7:28 PM GMT (Updated: 2021-08-28T00:58:42+05:30)

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடுகிறது. ரோகித் சர்மா, புஜாரா அரைசதம் அடித்தனர்.

லீட்ஸ்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லே ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 78 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டின் அபார சதத்தால் (121 ரன்) 2-வது நாளில் முழுமையாக கோலோச்சியது. ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 423 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை எட்டியது. கிரேக் ஓவர்டான் (24 ரன்), ஆலி ராபின்சன் (0) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 3.2 ஓவர்களில் எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து 432 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஓவர்டான் 32 ரன்னிலும், ராபின்சன் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ரோகித் 59 ரன்

அடுத்து 354 ரன்கள் பின்தங்கியஇந்திய அணி மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் தனது 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்த ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். தொடர்ந்து மேகமூட்டமான சீதோஷ்ண நிலை காணப்பட்டதால் வேகப்பந்து வீச்சை மிக கவனமுடன் எதிர் கொண்டனர். 19 ஓவர்கள் தாக்குப்பிடித்த போதிலும் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்தது. லோகேஷ் ராகுல் 8 ரன்னில் (54 பந்து) ஓவர்டானின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற பேர்ஸ்டோவிடம் சிக்கினார். பேர்ஸ்டோ இடது பக்கமாக பாய்ந்து ஒற்றைக்கையால் அற்புதமாக கேட்ச் செய்தார்.

இதன் பின்னர் ரோகித் சர்மாவுடன், புஜாரா கைகோர்த்தார். ‘மந்தமான பேட்ஸ்மேன்’ என்ற விமர்சனத்திற்குள்ளான அவர் இந்த முறை துரிதமாக ரன் திரட்டினார். இந்த கூட்டணியை உடைக்க பல்வேறு வியூகங்களை கையாண்ட இங்கிலாந்து வீரர்கள் அடிக்கடி எல்.பி.டபிள்யூ. கேட்டு அப்பீல் செய்த வண்ணம் இருந்தனர். கடைசியில் அந்த வகையிலேயே ரோகித் சர்மா வீழ்ந்தார்.

தேனீர் இடைவேளைக்கு பிறகு ரோகித் சர்மா (59 ரன், 156 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ராபின்சனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். தீர்ப்பை எதிர்த்து ரோகித் சர்மா அப்பீல் செய்தார். ரீப்ளேயில் பந்து மயிரிழையில் லெக்ஸ்டம்பில் உரசுவது தெரிந்ததால், ‘நடுவரின் முடிவு’ என்ற அடிப்படையில் ரோகித் சர்மா பரிதாபமாக வெளியேற்றப்பட்டார்.

இந்தியா போராட்டம்

இதைத்தொடர்ந்து கேப்டன் விராட் கோலி, புஜாராவுடன் இணைந்தார். முதல் இன்னிங்சில் செய்த தவறுக்கு பரிகாரம் தேடுவது போல் ஆடிய இவர்கள் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். நேற்றைய முடிவில் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 80 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. 19-வது சதத்தை நெருங்கியுள்ள புஜாரா 91 ரன்களுடனும் ( 180 பந்து, 15 பவுண்டரி), கேப்டன் கோலி 45 ரன்களுடனும் (94 பந்து, 6 பவுண்டரி) களத்தில் உள்ளனர்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இந்தியாவுக்கு மேற்கொண்டு 139 ரன் தேவைப்படுவதால், இன்னும் சிக்கலான நிலையிலேயே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் இந்த டெஸ்டில் இங்கிலாந்தின் கையே ஓங்கி நிற்கிறது. எனவே இன்றைய 4-வது நாளிலும் தோல்வியை தவிர்க்க இந்தியாவின் போராட்டம் தொடரும். இன்றைய தினம் இந்திய அணி முழுமையாக தாக்குப்பிடித்தால் ஆட்டத்தின் போக்கு மாறுவதற்கு வாய்ப்புண்டு.

Next Story