20 ஓவர் கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி


20 ஓவர் கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி
x
தினத்தந்தி 1 Sep 2021 8:28 PM GMT (Updated: 1 Sep 2021 8:28 PM GMT)

வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து 60 ரன்னில் சுருண்டு தோல்வியடைந்தது.

டாக்கா, 

இளம் வீரர்களை அதிகம் உள்ளடக்கிய டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 

நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் டாக்காவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் 9 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி கடைசி வரை சரிவில் இருந்து மீள முடியவில்லை. 

16.5 ஓவர்களில் நியூசிலாந்து 60 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி தனது முந்தைய மோசமான ஸ்கோரை சமன் செய்தது. ஏற்கனவே 2014-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக இதே 60 ரன்னில் அந்த அணி அடங்கி இருந்தது. அத்துடன் வங்காளதேச அணிக்கு எதிராக ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது. 

நியூசிலாந்து அணியில் டாம் லாதம் (18 ரன்), ஹென்றி நிகோல்ஸ் (18 ரன்) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். வங்காளதேச அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முஸ்தாபிஜூர் ரகுமான் 3 விக்கெட்டும், முகமது சைபுதீன் 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர்கள் ஷகிப் அல்-ஹசன், நசும் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷகிப் அல்-ஹசன் 25 ரன் எடுத்தார். 20 ஓவர் போட்டியில் வங்காளதேச அணி நியூசிலாந்தை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Next Story