இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இந்திய அணி 191 ரன்னில் ஆல்-அவுட்


இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இந்திய அணி 191 ரன்னில் ஆல்-அவுட்
x
தினத்தந்தி 2 Sep 2021 11:03 PM GMT (Updated: 2 Sep 2021 11:03 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி 191 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் இரு மாற்றமாக இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டனர். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இந்த டெஸ்டிலும் வாய்ப்பில்லை. இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், சாம் கர்ரன் கழற்றிவிடப்பட்டு ஆலி போப், கிறிஸ் வோக்ஸ் இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தயக்கமின்றி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்திய கேப்டன் விராட்கோலியும் முதலில் பவுலிங் செய்ய விரும்பிய போதிலும் ‘டாஸ்’ கைகொடுக்கவில்லை. முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரும், சுனில் கவாஸ்கர், ரோகித்சர்மா போன்ற வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவருமான வாசுதேவ் பரன்ஜாப் சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இந்திய வீரர்கள் இந்த டெஸ்டில் கையில் கருப்பு பட்டை அணிந்து களம் கண்டனர்.

இந்தியா தடுமாற்றம்

ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை படுஜோராக பயன்படுத்தி கொண்ட இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ‘இன்ஸ்விங்’, ‘அவுட்ஸ்விங்’ என்று துல்லியமாக பந்து வீசி அச்சுறுத்தினர். இதனால் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய போதிலும் இங்கிலாந்தின் புயல்வேக தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. சற்று எழும்பி வந்த கிறிஸ்வோக்சின் பந்தில் ரோகித் சர்மா (11 ரன், 27 பந்து) விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் லோகேஷ் ராகுல் (17 ரன்), ஆலி ராபின்சனின் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.

தொடர்ச்சியாக 7 ஓவர்களை மெய்டன்களாக வீசிய இங்கிலாந்து பவுலர்கள் இடைவிடாது குடைச்சல் கொடுத்தனர். பொறுமையின் நாயகனான புஜாராவை (4 ரன், 31 பந்து) ஆண்டர்சன் காலி செய்தார். ‘அவுட்ஸ்விங்’காக லைனில் இருந்து விலகி சென்ற பந்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆகிப்போனார்.

கோலி 50 ரன்

கேப்டன் விராட் கோலி இந்த முறை கொஞ்சம் நிலைத்து நின்று ஆடினார். 13-வது பந்தில் ரன் கணக்கை தொடங்கிய கோலி 22 ரன்னில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட் நழுவ விட்டார். இதற்கிடையே முன்வரிசையில் இறக்கப்பட்ட ஜடேஜா 10 ரன்னில் நடையை கட்டினார்.

தனது 27-வது அரைசதத்தை பூர்த்தி செய்த கோலி அதை பெரிய ஸ்கோராக மாற்றுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அணியின் ஸ்கோர் 105 ரன்களாக உயர்ந்த போது கோலி (50 ரன், 96 பந்து, 8 பவுண்டரி) ராபின்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் பிடிபட்டார். துணை கேப்டன் அஜிங்யா ரஹானே(14 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (9 ரன்) ஆகியோரின் தடுமாற்றம் இந்த டெஸ்டிலும் நீள்கிறது. அப்போது இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 127 ரன்களுடன் மோசமான நிலைமையில் ஊசலாடியது.

ஷர்துல் அதிரடி

இந்த சிக்கலான சூழலில் களம் புகுந்த ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர் அதிரடியாக ஆடி அணியை கொஞ்சம் கவுரமான நிலைக்கு கொண்டு வந்தார். 31 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர் தனது பங்குக்கு 57 ரன்கள் (36 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) சேர்த்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 61.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ராபின்சன் 3 விக்கெட்டுகளும், ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் தலா ஒருவிக்கெட்டும் கைப்பற்றினர்.

இங்கிலாந்துக்கு 3 விக்கெட்

பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் (5 ரன்), ஹசீப் ஹமீத் (0) இருவரையும் பும்ரா வெளியேற்றினார். தொடர்ந்து 3 சதம் அடித்த கேப்டன் ஜோ ரூட் 21 ரன்களில் (25 பந்து, 4பவுண்டரி) உமேஷ் யாதவின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 17 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
இங்கிலாந்து மண்ணில் அதிவேக அரைசதம்: ஷர்துல் தாக்குர் புதிய சாதனை

இந்திய வீரர் ஷர்துல் தாக்குர் 31 பந்துகளில் அரைசதம் நொறுக்கி அசத்தினார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை ஷர்துல் தாக்குர் படைத்தார். இதற்கு முன்பு இங்கிலாந்தின் இயான் போத்தம் 1986-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இதே மைதானத்தில் 32 பந்தில் அரைசதம் எடுத்ததே சாதனையாக இருந்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் 23 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்தார் விராட் கோலி

* இந்திய கேப்டன் விராட் கோலி 4 ரன் எடுத்த போது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) 23 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையை, இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரிடம் இருந்து பறித்தார். தெண்டுல்கர் தனது 522-வது இன்னிங்சில் தான் 23 ஆயிரம் ரன்களை தாண்டினார். ஆனால் கோலி 490 இன்னிங்சிலேயே இந்த இலக்கை தொட்டு விட்டார்.

* இந்திய வீரர் புஜாரா, ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சில் விக்கெட்டை தாரைவார்ப்பது இது 11-வது முறையாகும். இதன் மூலம் டெஸ்டில் அவரை அதிகமுறை பதம் பார்த்த பவுலராக ஆண்டர்சன் திகழ்கிறார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அவரை 10 முறை வீழ்த்தி இருந்தார்.

* இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் 39 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் சொந்த மண்ணில் விளையாடும் 95-வது டெஸ்ட் இதுவாகும். இதன் மூலம் உள்ளூரில் அதிக டெஸ்டுகளில் ஆடியவரான சச்சின் தெண்டுல்கரை (94 டெஸ்ட்) முந்தினார்.


அஸ்வின் தொடர்ந்து புறக்கணிப்பு

பொதுவாக லண்டன் ஓவலில் கடைசி கட்டத்தில் சுழற்பந்து வீச்சு ஓரளவு எடுபடும் என்பதால் இந்த டெஸ்டில் நிச்சயம் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் 3 டெஸ்டை போல் இந்த முறையும் அஸ்வினுக்கு இடமில்லை என்று இந்திய கேப்டன் கோலி கைவிரித்து விட்டார். ‘இங்கிலாந்து அணியில் 4 இடக்கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை தக்க வைத்துள்ளோம். அத்துடன் பேட்டிங்கிலும் பங்களிப்பு அளிக்கும் அவரே அணியின் சிறந்த கலவைக்கு சரியாக இருப்பார்’ என்பது கோலி சொல்லும் காரணமாகும். ஆனால் கோலி வேண்டுமென்றே அஸ்வினை புறக்கணிப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கண்டித்து பதிவிட்டு வருகிறார்கள். 413 விக்கெட், 5 சதங்கள் அடித்துள்ள அஸ்வினுக்கு இடமில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ‘இங்கிலாந்தில் இதுவரை நடந்துள்ள 4 டெஸ்டுகளிலும் அஸ்வின் சேர்க்கப்படாதது என்பது நான் பார்த்தமட்டில் வியப்புக்குரிய ஒரு முடிவு. முட்டாள்தனமானது’ என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். கோலியின் கணக்கு முதல்இன்னிங்சில் தப்பாகிவிட்டது. ஜடேஜா 10 ரன்னில் அவுட் ஆகியுள்ளார்.

Next Story