இந்திய அணி அபார வெற்றி: தொடரில் முன்னிலை பெற்றது


இந்திய அணி அபார வெற்றி: தொடரில் முன்னிலை பெற்றது
x
தினத்தந்தி 7 Sep 2021 1:54 AM GMT (Updated: 7 Sep 2021 1:54 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 466 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சதமும் (127 ரன்கள்), புஜாரா (61 ரன்கள்), ரிஷாப் பண்ட் (50 ரன்கள்), ஷர்துல் தாக்குர் (60 ரன்கள்) அரைசதமும் அடித்தனர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த கடினமான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 32 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் 31 ரன்னுடனும், ஹசீப் ஹமீத் 43 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

கடைசி நாள் ஆட்டம்

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 291 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். இருவரும் தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தியதுடன், ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கும் விரட்டினார்கள்.

அணியின் ஸ்கோர் 100 ரன்களை (40.4 ஓவரில்) தொட்ட போது தொடக்க ஜோடி பிரிந்தது. 11-வது அரைசதம் அடித்த ரோரி பர்ன்ஸ் (50 ரன்கள், 125 பந்து, 5 பவுண்டரி) ஷர்துல் தாக்குர் வீசிய அடுத்த பந்திலேயே விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் கண்ட டேவிட் மலான் 5 ரன் எடுத்த நிலையில் ‘ரன்-அவுட்’ ஆனார். முன்னதாக ஹசீப் ஹமீத் 123 பந்துகளில் தனது 4-வது அரைசதத்தை கடந்தார்.

ஹசீப் ஹமீத் 63 ரன்கள்

இதனை அடுத்து கேப்டன் ஜோ ரூட் களம் இறங்கினார். நிலைத்து நின்று ஆடிய ஹசீப் ஹமீத் (63 ரன்கள், 193 பந்துகள், 6 பவுண்டரி) ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த ஆலி போப் (2 ரன்), ஜானி பேர்ஸ்டோ (0) விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது ‘ஸ்விங்’ மற்றும் துல்லியமான ‘யார்க்கர்’ பந்து வீச்சில் சாய்த்தார். ஆலி போப் விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா கைப்பற்றிய 100-வது விக்கெட்டாகும். அவர் தனது 24-வது டெஸ்டில் இந்த இலக்கை எட்டினார். அடுத்து வந்த மொயீன் அலி (0) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் ஆகி நடையை கட்டினார்.

இதைத்தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ், ஜோ ரூட்டுடன் கைகோர்த்தார். இந்திய பவுலர்கள் நேர்த்தியான பந்து வீச்சு மூலம் தொடர்ந்து நெருக்கடி அளித்தனர். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் டிரா செய்யும் நோக்குடன் நிதானமான ஆட்டத்தை கையாண்டு போராடினார்கள். ஆனால் இந்த போராட்டத்தில் அவர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இந்திய அணி வெற்றி

80-வது ஓவர் முடிந்ததும் புதிய பந்து எடுக்கப்பட்டது. புதிய பந்தில் முதல் ஓவரை வீசிய ஷர்துல் தாக்குர், கேப்டன் ஜோ ரூட் (36 ரன்கள், 78 பந்து, 3 பவுண்டரி) விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன் அந்த அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது. பரபரப்பான ஆட்டத்தில் கடைசி வரிசை வீரர்களான கிறிஸ் வோக்ஸ் (18 ரன்), கிரேக் ஓவர்டான் (10 ரன்), ஜேம்ஸ் ஆண்டர்சன் (2 ரன்) ஆகியோரது விக்கெட்டுகளை உமேஷ் யாதவ் கபளீகரம் செய்தார்.

92.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 210 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆலி ராபின்சன் 10 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். சதம் அடித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அடுத்த ஆட்டம்

இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் 2 டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று இருப்பது இது 2-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 1986-ம் ஆண்டில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி இங்கு 2 டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

ஸ்கோர்போர்டு

முதல் இன்னிங்ஸ்

இந்தியா 191

இங்கிலாந்து 290

2-வது இன்னிங்ஸ்

இந்தியா 466

இங்கிலாந்து

ரோரி பர்ன்ஸ் (சி) பண்ட் (பி)

தாக்குர் 50

ஹசீப் ஹமீத் (பி) ஜடேஜா 63

டேவிட் மலான் (ரன்-அவுட்) 5

ஜோ ரூட் (பி) தாக்குர் 36 ஆலி போப் (பி) பும்ரா 2

பேர்ஸ்டோ (பி) பும்ரா 0

மொயீன் அலி (சி) சப்

(சூர்யகுமார்) (பி) ஜடேஜா 0

கிறிஸ்வோக்ஸ் (சி) ராகுல்

(பி) உமேஷ் 18

கிரேக் ஓவர்டான் (பி) உமேஷ் 10

ஆலி ராபின்சன் (நாட்-அவுட்) 10

ஜேம்ஸ் ஆண்டர்சன் (சி)

பண்ட் (பி) உமேஷ் 2

எக்ஸ்டிரா 14

மொத்தம் (92.2 ஓவர்களில்

ஆல்-அவுட்) 210

விக்கெட் வீழ்ச்சி: 1-100, 2-120, 3-141, 4-146, 5-146, 6-147, 7-182, 8-193, 9-202.

பந்து வீச்சு விவரம்:

உமேஷ் யாதவ் 18.2-2-60-3

ஜஸ்பிரித் பும்ரா 22-9-27-2

ரவீந்திர ஜடேஜா 30-11-50-2

முகமது சிராஜ் 14-0-44-0

ஷர்துல் தாக்குர் 8-1-22-2

Next Story