20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு?


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு?
x
தினத்தந்தி 7 Sep 2021 10:46 PM GMT (Updated: 2021-09-08T04:16:12+05:30)

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி, 

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணிப்பட்டியலை வருகிற 10-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேத்தன் ஷர்மா தலைமையிலான இந்திய தேர்வு கமிட்டியினர் இங்கிலாந்தில் உள்ள கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோருடன் வீடியோகான்பரன்ஸ் மூலம் கலந்து ஆலோசித்து அணியை இறுதிசெய்கிறார்கள். விரல் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான். 

இதனால் வருண் சக்ரவர்த்தி, ராகுல் சாஹர் ஆகியோரில் ஒருவர் பெயர் பரிசீலிக்கப்படும். தொடக்க வரிசைக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் இருப்பதால் மூத்த வீரர் ஷிகர் தவானுக்கு இடம் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியே. அதே சமயம் மிடில் வரிசையை வலுப்படுத்த சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இடம் பெறுவார் என்று தெரிகிறது.


Next Story